முகவரி தொலைத்த கடிதங்கள் # 15

வசந்தகாலக் குறிப்புகள்

Letter#15

இன்னுமொரு குளிர்காலம் கடந்துவிட்டிருக்கிறது. நீரோடைகள் நகரத் தொடங்கியிருக்கின்றன. உறக்கம் தெளிந்து கலைந்து திரிகின்றன உறைந்த மீன்கள். பனியினை உதிர்த்துவிட்டு இலைகளை எழுப்பிக் கொண்டிருகின்றன கிளைகள். திரும்பிவரத் துவங்கியிருக்கின்றன கூடு தேடிப் பறவைகள்.

வெகுதூரம் வந்து விட்டிருக்கிறேன். திரும்பிச் செல்லும் தடங்களை அழித்துவிட்டே வந்திருக்கிறேன். பதில் எழுதியிருப்பாயோ எனத் தேடி இப்பொழுதெல்லாம் செல்வதில்லை என் பழைய முகவரிக்கு.

ஒருவேளை வந்து சேர்வாயோ என்ற காத்திருப்பில் அல்ல. இனி ஒருபோதும் நீ வரப் போவதில்லை என நிச்சயமாய் தெரிந்திருப்பதாலேயே.

கவிதைகளை வீட்டின் வேர்களுக்குக் கீழ் ஆழப் புதைத்த பிறகு, புதிய முகவரியின் தனிமை பழகிவிட்டிருக்கிறது. எப்பொழுதாவது அரிதாக மேற்கூரையில் எட்டிப் பார்க்கும் கவிதையினை வார்தையிலேயே கிள்ளி எறியப் பழகியிருக்கிறேன். என் எழுதுகோலில் மை நிரப்பி நாட்களாகின்றன. காகிதங்கள் பத்திரமாய் இருக்கின்றன கரையான்களின் குளிர்காலச் சேமிப்புக் கிடங்கில். உனக்கும் சேர்த்துப் போட்டிருக்கும் தோட்டத்து நாற்காலியில் தற்காலிகமாய் தங்கியிருக்கின்றன பச்சைப் பாசிகள். உன் தேனீர்க் கோப்பைகளில் பூத்திருக்கின்றன காளான் குடைகள். வாசல் வந்து சேர்ந்திருக்காத உன் காலடித் தடங்கள் தேடி மின்னல் பூச்சுடன் கடந்து போகின்றன நம் பெயர் எழுதிய மேகங்கள்.

எதிர்பாராத தெரு ஒன்றின் திருப்பத்தில் எப்படியும் நம் சந்திப்பு மீண்டும் நிகழக் கூடும் எனத் தெரிந்திருந்தாலும், அது இன்றாக இருக்ககூடும் என எதிர்பார்த்திருக்கவில்லை. முன்னிரவில் என் திண்ணைப் பூக்கள் பூத்திருந்ததன் காரணம் கண்டுகொண்டேன்.

பக்கத்தில் நீ இருந்தாய்.

வருடங்கள் கடந்தும் அத்தனை இருட்டிலும் உன் புன்னகையை அடையாடம் கண்டுகொள்ளத் தவறவில்லை நான். வசந்தகாலத்தின் குறிப்புகள் உன் ஆடையெங்கும். பூத்திருந்தனவா நீ வரக்கூடுமென வழிகளெங்கும் விதைத்து வைத்திருந்த, எழுதப்படாத என் கவிதைகள்?

என்ன தேடுகிறாய் என் கண்களின் ரேகைகளில்? நம் முதல் சந்திப்பின் மிச்சங்களையா? சில தழும்புகளால் காயங்களைப் போர்த்த மட்டுமே முடிகின்றது. நிரந்தரமாய் என் கண்களில் கண்ணீரையும் கன்னங்களில் முத்தங்களையும் உறையச் செய்த உன் இதழ்கள் மெல்ல அசைகின்றன, சுவற்றில் ஆடும், மெழுகுவர்த்தியயின் தலைகோதும் நெருப்பின் நிழலாய்.

“ஏன் இப்பொழுதெல்லாம் கடிதங்கள் எழுதுவதில்லை” என்றாய். “சாலைகள் தொலைந்து போன வழிப்போக்கன் இளைப்பாறவே விரும்புவான்” என்றேன்.

“உன் கால்கள் சுற்றியும் காதலின் சாலைகள். தொலைந்தது பாதைகளா இல்லை நீயா?” என்றாய். “எந்தப் பாதை உன்னைச் சேரும்” என்றேன்.

“அதை முடிவு செய்ய வேண்டியது நீதான்” எனச் சொல்லிப் புன்னகைத்தாய். 

மிச்சமிருக்கின்ற வினாடிகளை வார்த்தைகளால் தின்று தீர்க்காமல் முகம் பார்த்துக் கிடந்தேன்.

ஜன்னல் கொத்தும் பறவையின் சத்தத்திலோ, அதன் திரைச்சீலையை காற்று மோதும் இடைவெளியில் முகத்தில் மோதக் காத்திருக்கும் வெளிச்சத் தொடுகையாலோ, அதிர்ந்து மௌனம் பேசும் அலைபேசியின் அலாரத்திலோ நீ கரைந்து போகக்கூடும் என்ற பயத்திலேயே வினாடிகள் கடக்கின்றன.

இனி இந்தப் பகலை நான், நினைவில் எஞ்சிய கனவின் தடயங்களை வருடியபடிக் கழிக்க வேண்டும்.

***

இதுவும் …

ithuvum

உன் நினைவாக வைத்திருக்கும்
புத்தகமொன்றின்
பழுப்பேறிய பக்கமொன்றிலிருந்து
விரல் தொட்டது
என்றோ நீ சூடி
தொலைத்த பூ ஒன்று …

இடைப்பட்ட நாளொன்றின்
நடுச்சாமத்தில்
தப்பியோடிவிட்டிருக்கிறது
உன் வாசனை …

எவ்வளவு வருடியும்
மீட்டெடுக்க முடியவில்லை
உன் ஸ்பரிசத்தை…

“காலம் கடந்து விட்டதா
இருவருக்கும்”
என்றேன்.

“அல்லது காலத்தை நாம்
கடந்திருக்கலாம்”
என்றபடி
காற்றில் கரையத் தொடங்கியது.

வெண்ணிற இரவுகள் – ஜனவரி

Tags

, , , ,

 

January

 

முடிவிலாப்  புன்னகை ஒன்றைத்

தந்து போகிறாய்

உன் முகம் பார்த்துக்கிடந்த நாட்களின்

நினைவுகளில் நான் ….

————————————————————-

ஒரு கவிதை எழுதும் நேரத்தில்

எங்கே சென்றாய் …

————————————————————-

நீ பூமிவாசி

நான் நிலாவுக்குச் சொந்தக்காரன்

நீ மறையவும் நான் தேய்வதும்

நான் துரத்திட நீ ஓடவும்

சபிக்கப்பட்டிருக்கிறோம்

ஒரே பால்வீதியில் பார்த்துக்கொண்டே

பயணித்திருக்க

அவரவருக்கான நீள்வட்டப் பாதைகளில்  ….

 

—————————————————————

 

மின்னல்கள் படிக்கக்

கற்றுக் கொண்டிருக்கிறேன்

இனி நீ

மழைபேசியில்

குறுஞ்செய்திகள் அனுப்பு

 

——————————————————————-

 

தெருவிளக்கின் புன்னகையில்

இரவு முழுவதும் பெய்து கொண்டிருக்கிறது

மஞ்சள் பனி

உன் ஸ்பரிசங்களை நகலெடுத்துக் கொண்டு …

 

———————————————————————

 

குடை மறந்த நீ

எச்சில் வடிக்கும் மேகம்

திட்டமிட்டே அணைக்கிறது

முத்தமிட்ட எச்சில் கறை தெருவெங்கும்

நீரை நனைக்க

எங்கே கற்றுக்கொண்டாய் …!

———————————————————————-

 

உனக்கென எழுதி வேண்டாமென்று

அடித்துப்போட்ட வார்த்தைகள்

எங்கெங்கு போயினும்

கடிக்க வருகின்றன

காலைச் சுற்றிய பாம்புக் குட்டிகளாய் …

 

————————————————————————–

முகவரி தொலைத்த கடிதங்கள் # 14

Tags

, , ,

புதிய முகவரி

Love letter 14

சில வருடங்களுக்கொருமுறை நடப்பது தான்.

பொருட்களை எல்லாம் கட்டிவைத்த காலி அறை முதல் நாளை நினைவுபடுத்துகிறது. புதிய இடமென்று அன்று வராத தூக்கம் இன்றும் என்னைத் தொல்லை செய்யாமல் தள்ளியே நிற்கிறது. வெகுகாலம் நடந்து முடிந்த போரொன்றில் திசைகள் தெரியாமல் தனித்து நிற்கும் களைத்துப் போன சாமுராய் ஒருவனின் கதை நினைவுக்கு வருகிறது.

நான்கு சுவர்களும் உதடுகள் பிதுக்கிப் பார்க்கின்றன. ஜன்னல்கள் ஓலமிடுகின்றன. என் ஞாபகங்கள் மொத்தமும் பாலையின் வாசனை.

இதுகாறும் என் அந்தரங்களை மெளனமாக கவனித்துக் கொண்டிருந்த இவ்வீட்டில் அடுத்து குடி வரப்போகிறவர்களுக்கு ஏதேனும் தடையங்களை விட்டு விடுவேனோ என்கிற பயம் அடிவயிற்றில் அழுத்தியபடியே உள்ளது. உனக்காக எழுதிய கடிதங்களையும், கவிதைகளையும் இங்கேயே தவறவிட்டு விடுவேனோவென ஒவ்வொரு மூலைகளிலும் மீண்டும் மீண்டும் தேடித் திரிந்து உறுதி செய்து கொண்டிருக்கிறேன். 

இந்தமுறை அறையின் எந்தப்பக்கத்தையும் புகைப்படம் எடுக்கப் போவதில்லை.  இன்னமும் கொஞ்ச நாட்களில் புதிய இடத்திற்குப் பழகிப் போய் இந்த அறையையும் நாட்களையும் வாசனையும் நிச்சயம் மறந்து போவேன். இதுகூட ஒரு பொழுதில் எனக்குப் பிடிக்கவே பிடிக்கதெனக் கருதிய புதிய அறைதான். இடங்களை விடுத்துப்  பாதைகளையும் பயணங்களையும் விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும்.

கொஞ்சம் தேநீர் நிறைய வானத்துடன் மேகம் மொத்தமும் உன் முகம் தேடிக் கிடந்த வீட்டின் முற்றத்தில் எப்பொழுதும் இனி இரவுகளின் நீலம் உதிர்ந்து கிடக்கட்டும். இலைகள் களைந்த மரங்களில் பனிப்பூக்கள் பூக்கட்டும். ஏனென்றே தெரியாமல் நள்ளிரவில் அலறும் வாகனங்களின் அபஸ்வரம் தொலைதூரத்தில் கேட்கும் இசையாகட்டும். எப்பொழுதாவது குளிர்கால உறக்கம் களைந்து என் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கும் அணில் எனைத் தேடாமல் இருக்கட்டும்.

சாளரத்தின் கீற்று இடைவெளிகளில் இரவு முழுவதும் எனைத் தீண்டிப் பார்க்கும் வெண்ணிலவே … என் ராத்திரி நேரத்து பயங்களே .. உறக்கம் களைவதற்குக் கொஞ்சம் முன்பு வரும் அழகிய கனவுகளே …போய் வருகிறேன்.

நிற்க.

இன்னொரு பைத்தியக்காரத்தனமான கடிதத்தை ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். ஒருவேளை எனது கடிதங்களுக்கு நீ பதிலளிக்க விரும்பினால், இன்றிலிருந்து இந்த முகவரியில் நான் இல்லை.

————————————————

முகவரி தொலைத்த கடிதங்கள் # 13

Tags

காற்றில் உதிரும் நிறங்கள்

பயணக் குறிப்புகளுடன் சேர்த்து என்னிடம் சில வினாக்களும் இருக்கின்றன. சமயங்களில் இருப்பினை உறுதி செய்யக் கேள்விகளாவது கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ‘ம்’ என்ற பதில் கேட்க யாருக்குத்தான் ப்ரியம் இருக்காது.  நீ சொல்லப்போவது என்னவென்று தெரிந்த பின்பு, உன்னிடம் கேட்காமல் இருப்பதே பதிலினை எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கான அமைதி பெரும் ஒரே வழி.  

இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறாயா இந்தக் கடிதங்களை ? எனில், எனது முதல் கேள்வி இது தான், உனக்கும் எனக்குமான தொடர்பு இந்தக் கடிதங்கள் மட்டுமே என்றான பின்பு நான் வேறென்ன செய்ய ?

விழிப்பிற்கும் உறக்கத்திற்குமான பல இரவுகளின் போராட்டத்திற்குப் பிறகு  தூக்க மாத்திரைகளைப் போல அவ்வப்பொழுது இந்தக் கடிதங்களை எழுதுவது தவிர்க்க முடியாமல் போகின்றது. இன்னும் ஒரேஒருமுறை உனைக் காண வேண்டும் போன்ற வழக்கமான பிதற்றல்களை இந்தக் கடிதத்தில் தவிர்க்க முயற்சிக்கிறேன். இந்தக் கடிதம் எனது பயணக்குறிப்புகள் பற்றிச் சொல்ல மட்டுமே என நிச்சயமாய் தெரியாத போதும்.

நிறங்களால் ஆன ஆஸ்பென் உனக்கு நிச்சயம் பிடிக்கும். என்ன நிறம் பிடிக்கும் என்று கேட்டதற்கு எல்லாமே என்றாய். கருப்பும் வெள்ளையும் கூட நிறங்கள் தான் என்பது தெரியுமா உனக்கு. என்னிடம் இருப்பது அந்நிற நினைவுகள் மட்டுமே. நீ எடுத்துச் சென்றுவிட்ட மீத நிறங்கள் எல்லாம் இங்கே காற்றில் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. உன்னோடு நடந்து சென்ற பாதைகளின் சாயல்களையே ஏன் என் தனியான பயணங்கள் எல்லாம் கொண்டிருக்கின்றன ? நீயும் இங்கே இருந்திருக்கலாம். நிறங்களால் ஆன ஆஸ்பென் எனக்கும் பிடித்திருக்கும்.

இலையுதிர்காலத்தில் ஆஸ்பென்  இன்னும் அழகாய் இருப்பதாய் சொல்கிறார்கள். ஓடி ஓடிச் சென்று புகைப்படங்களுக்குள் அடைக்கிறார்கள். அடுத்த நிழற்படத்திற்குப் புன்னகைக்கும் அவகாசம் கூட இன்றி காற்றினால் களவாடப்படும் இலைகளின் ஓலங்கள் மட்டுமே எனக்குக் கேட்கின்றன. உதிர்ந்து செல்லும் இலைகள் பற்றிப் பாட மரங்கள் எல்லாம் மௌனத்தைத் தேர்ந்தெடுத்துவிட்ட பின்பு வேறெந்த மொழி என்னிடம் மிஞ்சும். இலையுதிர்காலம் என்பது அழகிய கனவொன்றின் முடிவா இல்லை வசந்தகாலம் பற்றிய புதிய கனவொன்றை எதிர்பாத்துத் துவங்கும் குளிர்கால உறக்கமா?  

இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறாயா இந்தக் கடிதத்தை ? எனில் இந்தக்கிளைகள் மீண்டும் பூக்குமெனச் சொல்லேன் என்னிடம். என் பாதைகள் மொத்தமும் வியாபித்திருக்கும் சருகுகளை மறந்துவிட்டு நானும் பயணித்திருப்பேன்.  

——————————————————————————