Tags

,

இன்னும் ஒரேமுறை …

 

 

கடிதத்தின் முதல் வரி கிடைக்காமல் இருப்பது குறித்து வருத்தமாயிருக்கிறது. என்னைச் சுற்றிலும் சிதறும் வார்த்தைகள் நடுங்கியபடியே இருக்கின்றன நம்பிக்கையின்மையைப் பூசியபடி. மௌனமே பரவாயில்லை எனத் தோன்றுகிறது. யாருடைய செவிகளும் எனக்குத் தேவையில்லை என உரத்துக் கத்தத் தோன்றுகிறது. ஆனால இருளில் புதைந்து கிடக்கும் கேள்விகளைக் காட்டிலும் , பகலில் நிர்வாணமாக என்னைப் பார்த்திருக்கும் மௌனமே பயமேற்படுத்துவதாய் இருக்கிறது. உறக்கமின்றியும் கண்கள் மூடியிருக்கவே பிரியப்படுகிறேன், கனவில் ஸ்பரிசித்திருக்கும் உன் உள்ளங்கையின் வெம்மையை நிகழ்விற்கு எடுத்துவர முடியாது என நிச்சயமாய்ப் புரியும் வரை.

 

மார்பெலும்புகளின் குறுக்கே ஆயிரம் தசை நார்கள் பின்னிக்கொண்டு ஒத்திசைத்து அதிர்வது போல உள்ளே உன் பெயரே கேட்டுக் கொண்டிருக்கிறது , கட்டுப் படுத்தமுடியாமல். தொட்டியில் இருந்து எல்லாக் காலைகளிலும் ஆர்வமாய் எட்டிப் பார்க்கும் என் தோட்டத்து ரோஜா , மாலையில் தன் முள்ளெடுத்து தானே குத்திக் கொண்டு மடிந்து போகின்றது. முள்ளில்லாத நான் தொட்டிக்கு நீரூற்றியபடி அடுத்த பூவிற்காகக் காத்திருப்பதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும்.

 

ஒரேயொருமுறை உன்னைச் சந்தித்துவிட்டால் போதும், நான் ஜீவித்திருப்பதற்கான ஓட்டைகள் விழுந்த காரணப் பாத்திரத்தைக் கொஞ்சமேனும் நிரப்பிக் கொள்வேன்.

 

சில சந்திப்புகள் அர்த்தமற்றவைகள் போலத் தோன்றினாலும் , இருவருக்கும் அப்படியே இருக்கவேண்டுமென்பதில்லையே. வேண்டா வெறுப்பாக முகம் மூடிக் கொண்டு  ஆதவன் முதுகு காட்டிச் சுற்றத் துவங்கிவிட்டால் , என்ன செய்யும் நிலவில்லாத இரவு , எதை ஓடி வரச் சொல்லுவார்கள் பிள்ளைகளுக்குச் சோறூட்ட அன்னைகள். என்ன செய்வேன் நானும் கூட.

தற்செயல்களின் நிகழ்தகவுகள் எப்பொழுதுமே எனக்குச் சாதகமாக இருந்ததில்லை. செங்கால் நாரைகள் கூட நீ இருக்கும் திசை நோக்கிப் பறக்க மறுக்கின்றன. நானும் கூட இங்கே கைகளால் மெய் பொத்தித் தனிமையில் நடுங்கிய படி இருக்கிறேன் வழக்கம் போல கேள்விகளை உன்னிடம் காற்றில் அனுப்பி விட்டு.

 

ஒவ்வொரு சந்திப்பிலும் சொல்வது தான் , கேட்டுக் கேட்டு உனக்குச் சலித்தும் போயிருக்கலாம் . இதுவே கடைசி முறை . இன்னொருமுறை என நிச்சயம் கேட்க மாட்டேன். வேதாளத்தின் விண்ணப்பத்திற்கு இந்த ஒரேயொருமுறை மட்டும் பதில் சொல்லிவிட்டுப் போ.

 

————————————-