Tags

ஃபீனிக்ஸ்

இந்த ஊர் அறவே பிடிக்கவில்லை எனக்கு.

இங்கு எல்லாரும் தனியாக இருக்கிறார்கள். எந்தக் கிளைகளிலும் இலைகள் இல்லை. பூக்களுக்கு நான் எங்கே செல்ல?

மரத்தில் தனித்து உறங்கிக் கொண்டிருக்கும் பூனையும், அதிகாலை பெய்த மழையின் சவத்தில் நீந்திக் கொண்டிருக்கும் ஒற்றை வாத்தும் , பனி விழும் சாலையில் தள்ளாடியபடி ஊன்று கோல் கொண்டு  நத்தையின் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் கிழவனும், அறையின் சாளரத்தை அறைந்து மூடச் சொல்கிறார்கள். என் மனதின் சாளரதிற்கான சாவி எங்கே ?

உலகின் மொத்த இசைக்கருவிகளையும் உடைக்க வேண்டும். மூங்கில்களைக் கொளுத்தலாம். மின்விசிறிச் சப்தம் கூட இல்லாத அறையின் கதவிடுக்கு  வழி கண்ணீர் கொண்டு வரும் காற்றின் இசையை எப்படி நிறுத்த ?

கவிஞர்களை நாடு கடத்தலாம். காற்றில் மிதந்து கொண்டு என்னைச் சுற்றி அலையும் ஏற்கனவே எழுதப்பட்ட கவிதைகளை என்ன செய்வது ?

இந்த ஊர் அறவே பிடிக்கவில்லை தான் எனக்கு.

இங்கு எந்தக் கிளைகளிலும் இலைகள் இல்லை. இருந்தும் வசந்தகாலத்தின் வருகைக்காக கைகள் விரித்தபடி காத்திருக்கும் கிளைகள் நிச்சயம் பூக்கள்  பூக்குமென்கின்றன.

மரத்தில் தனித்துறங்கும் பூனையின் கனவில் , அது நகரச் சந்தையில் சந்தித்த சீமாட்டியின் கைபையுள் இருந்து எட்டிப் பார்த்த வெண்பூனை புன்னகைத்துக் கொண்டிருக்குமோ ! இறகுகள் இழந்த ஒற்றை வாத்து தன் பெட்டைக்காக , இறந்து கிடக்கும் மழையை உயிர்ப்பிக்க முயன்று கொண்டிருக்கிறதோ ! குளிரில் நடுங்கியபடி வீடு சேரும் கிழவனின் ஊன்றுகோல் பிடுங்கி எறிந்துவிட்டு , கட்டியணைத்து சுடு முத்தமொன்றைக் கன்னத்தில் தரக்  கதவோரம் காத்திருக்கிறாளோ அவன் கிழ மனைவி !  சாவி போல சாளரத்தையும் நான் தொலைக்கத் தான் வேண்டும்.

எவ்வளவு தடுத்தும் அறை நுழையும் காற்றின் இசைக்கு , எனைச் சுற்றி அலையும் கவிதைகளில் இருந்து வார்த்தைகள் திருடி எனக்கான பாடல் எழுதிக் கொள்கிறேன். மூங்கில்களோடு பிழைத்துப் போகட்டும் கவிஞர்களும்.

ஒருவேளை இந்த ஊர் எனக்குப் பிடிக்கக் கூடும்.

 

—————————————————————————————————-