Tags

,

 

மீண்டும் கனவுகள் ..

 

எறும்புகளைப் போலத்

தீராப்பசியுடன்

என் உணர்வுகளெங்கிலும்

ஊறித் திரிகிறாய்  ..

உறங்கியும் உறங்காத உன்மத்த நேரங்களில்

என்னைத் தின்கிறாய் .

எத்தனை முறை சொல்வது உன்னிடம்

என்னைச் சந்திக்க என் கனவில்

வராதே என்று.

 

எத்தனை முறை உன்னைத் துரத்துவது

இனியும் என்ன தான் செய்வது ..

இமைகளை மூடுகிறேன்

விழிகளுக்குள் இறங்கிடுகிறாய்

எங்கே ஒளிந்திருந்தாய் இத்தனை நேரமாய் ..

 

என்றோ பார்த்த புகைப்படத்தின் ஞாபத்திலா

தூரத்தில் கேட்டுக் கொண்டிருக்கும் பாடலிலா

பேசிய வார்த்தைகளிலா

மௌனப் புன்னகையிலா

தலை மேல் சுற்றியழும் மின்விசிறியின் பின்னாலா

நாட்குறிப்பேடுகளின் மழுங்கிய பக்கங்களின்

மடங்கிய முனைகளிலா 

உன் நினைவுகளால் முழுவதும் துருவேறிப் போயிருக்கும்

என்னுள்ளா …

 

நீ தலைகோதுவதும்

தோள் சாய்வதும் 

மடி சேர்த்துக் கொள்வதும்

பேசிச் சிரிப்பதுவும்

மெதுவாய் பின் முறைப்பதுவும்

உதடுகளின் ஈரங்களும்

நிஜமாய் இருக்கின்றன

சில காயங்கள் புதிதாய் பிறக்கின்றன

சில நிதர்சனங்கள் மறக்கின்றன

சுடும் சுவாசமும் பிசுபிசுக்கும் கண்ணீரும்

அருகே .. மிக அருகே.

தொடர்பறுந்து வியர்த்தெழும் வேளைகளில்  எல்லாம்

‘வீல்’ என்று அழுகிறது மனது ..

 

எப்படிச் சொல்வது உன்னிடம்

என்னைச் சந்திக்க என் கனவுகளில்

வராதே என .

 

டிஸ்கி  1:-

யாரேனும் நா முத்துக்குமாரின்  என்னைச் சந்திக்க கனவில் வராதே புத்தகத்தை வாங்க விரும்பினால் …

டிஸ்கி 2 :-

மாப்பிள்ளை நான் தான் .. நான் போட்டிருக்க சட்டை மட்டும் தான் நா முத்துகுமாரோடது .