Tags

,

பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் மொத்தமாக நனைந்திருந்தன. இன்னும் கொஞ்சம் நனைக்க அந்த தேவாலயத்தின் கண்ணாடிப் பரப்பெங்கும் நுழைவாயிலின் உச்சியில் இருந்து வழிந்து கொண்டிருந்த நீர் முயன்று கொண்டிருந்தது.

கால்கள் இல்லாத ஒருவன் அந்த தேவாலயத்தின் மணி அடிக்கும் பொறுப்பில் இருந்தான். அவன் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து நுழைவாயில் தெரியாது. தடுப்புகளின் இடைவெளியில் உள்ளே செல்பவர்களின் ஆடைகளும் , அவர்களின் கைகள் மட்டுமே தெரியும். நாட்கள் முழுக்க எத்தனை கைகளும் , மெழுகுவர்த்திகளும் உள்ளே செல்கின்றன என எண்ணிக் கொண்டிருப்பதில் அவனுக்கு அலாதிப் பிரியம். மெழுகுவர்த்திகளின் எண்ணிக்கையைக் கொண்டு அவனால் உட்செல்பவர்களின் பிரச்சனையின் வீரியத்தை அளவிட முடிந்திருந்தது. அவன் மனதுக்குத் தோன்றினால் அவர்களது பிரார்த்தனை நிறைவேற வேண்டுமென மணி அடிப்பது அவன் வழக்கம்.

தேவாலயத்தின் மணி ஒருமுறை தனது மேலிருந்த நீர்த் துளிகளை சிலிர்த்துக் கொண்டு ஒலித்தது. இப்பொழுது அந்த முடவன் மணி அடித்தது வெள்ளை உடை அணிந்த , ஒற்றை மெழுகுவர்த்தியை இறுகப் பற்றியிருந்தவளின் கைகளுக்காக. கொஞ்சம் இடைவெளி விட்டு ஒற்றை ரோஜாவை அதை விட இறுகப் பிடித்தபடி தொடர்ந்திருந்த கைகள் புதியதாகத் தெரிந்தது.

அந்த ரோஜாவுக்குச் சொந்தக்காரன் அந்தப் பெண்ணிடம் இருந்து நான்கு மேஜைகள் பின்னால் உட்கார்ந்து கொண்டான்.

உருகிக் கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் மஞ்சள் வெளிச்சத்தில் மண்டியிட்டுக் கண்கள் மூடியபடி பிராத்தனையில் இருந்தாள் அவள். மிக மிக அழகாக முணுமுணுத்துக் கொண்டிருந்தன அவள் உதடுகள்.

அவளை நோக்கியபடி அவனது பிரார்த்தனையைச் சொல்லிக் கொண்டிருந்தான் அவன் மெளனமாக.

மெல்லக் கண்களைத் திறந்து ஓரத்திலிருந்த பாவமன்னிப்புக் கூண்டைப் பார்த்தாள். யாருமில்லாமல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன அதன் கதவுகள். சுற்றிலும் பார்த்தாள். யாருமில்லை அவளையும் அவனையும் தவிர. அவளைப் பார்த்ததும் மெலிதாகச் சிரித்தான் அவன். சட்டென்று முகம் திருப்பிக் கொண்டு மீண்டும் பிரார்த்தனை செய்வதாகப் பாசாங்கு செய்யத் துவங்கினாள். கண்களும் உதடுகளும் விடாமல் துடித்துக் கொண்டிருந்தன.

சிறிது நேரம் கழித்து கண்கள் திறந்தவள் மீண்டும் பாவ மன்னிப்புக் கூண்டைப் பார்த்தாள். வாங்கிக் கொள்ள யாரும் வருவதாய் தெரியவில்லை. நிமிர்ந்து நேரே கர்த்தரிடமே சொல்லத் துவங்கினாள், அவருக்கு மட்டும் கேட்கும் படி , அவருக்கு மட்டும் புரியும் மொழியில். சிலுவைக் குறியிட்டுக் கொண்டு முத்தமிட்டுக் கொண்டாள். சட்டென்று புன்னகை ஓடியது அவன் உதட்டில்.

அவள் எழுந்து கொண்டதும் தானும் எழுந்து கொண்டான். மிக கவனமாக அவன் பார்வையைத் தவிர்த்து அவன் புறம் திரும்பாமல் வாயிலை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

காலடிச் சத்தங்கள் கேட்டு ஆர்வமானான் கிழவன். அவன் ஜன்னல் வழிப் பார்வையில் மெழுகுவர்த்தி இல்லாத பெண் முதலில் கடந்து சென்றாள். கிழவனின் கண்கள் இன்னும் ஆர்வமானது. இறக்கி விடப்படாத ரோஜாவுடன் தயங்கித் தயங்கி அவனின் கைகள். கிழவனின் உதடுகள் கர்த்தரின் பெயரைச் சொல்லின. மீண்டுமொருமுறை மணி அடித்தான்.

ஆலய உச்சியைப் பார்த்து முத்தமிட்டு வீதியில் இறங்கி நடக்கத் துவங்கினாள்.

சாலையில் தேங்கியிருந்த நீர் ஆடையில் பட்டு விடாமல் இருக்க கவனமாய்த் தூக்கிப் பிடித்த படி நீரில்லாத இடமாகப் பார்த்து தாவித் தாவிச் சென்றாள். தன் விலையுயர்ந்த காலணிகள் நனைவதைப் பற்றி கவலைப் படவேயில்லை அவன். அவன் கவனம் முழுக்க அவளும் , கையில் இருந்த ரோஜாவின் கணமும் மட்டுமே .

ஒவ்வொரு வீடுகளாகக் கடந்து கொண்டே இருந்தாள் தனக்குப் பின்னே யாருமே வரவில்லை என்ற பாவனையுடன். அநேகமாக எல்லா வீட்டுக் கதவுகளும் பூட்டப் பட்டிருந்தன. மழைக்காகவோ என்னவோ.

தன் இடம் வந்து விட்டது என்பது போல ஒரு விடுதி முன் வேகம் குறைத்து நின்றாள். அவனும் நின்று கொண்டான். அவள் திரும்பி நேரே அவனை நோக்கி வரத் துவங்கினாள். அவளின் பாத அதிர்வுகள் அவனில் நடுக்கமாக ஒட்டிக் கொண்டன.

என்ன வேண்டும் என்றாள். கேள்வியை எதிர்பார்த்தவன் போல அவளையே பார்த்துக் கொண்டு மெளனமாக இருந்தான். சொல்லப் போகிறாயா இல்லையா என்ற பார்வை அவளிடம் இருந்தது.

“ஏற்கனவே சொன்னது தான் .. புதிதாகச் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை.. இனி சொல்ல வேண்டியது நீ தான் … ”

“என்னிடமும் சொல்வதற்குப் புதிதாக எதுவும் இல்லை …”

“எனினும் நான் மீண்டும் சொல்வேன் .. உன்னுடன் வாழ விரும்புகிறேன் … ” ரோஜாவை நீட்டினான்.

வாங்கிக் கொள்ளாமல் இகழ்ச்சியாய் சிரித்தாள். அவளையே நொந்து கொள்வதாய் இருந்தது அந்த சிரிப்பு.

எதோ சொல்ல முயன்றவன் அந்தப் பக்கமாக இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் கடக்க சற்று நேரம் வார்த்தைகளைக் கைவிட்டான்.

கடந்து செல்கையில் அவளை மிக மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே சென்றனர்.

எந்தச் சலனமும் இல்லாமல் அந்த வார்த்தைகளை வாங்கிக் கொண்டிருந்தாள். கண்களில் நீர் கோர்க்கத் துவங்கியது.

“கேட்டாயல்லவா , அவர்கள் பேசியதை … போய்விடு இங்கிருந்து … மீண்டும் உன்னைப் பார்க்கும் எண்ணமில்லை என்னிடம் …” விடுதியின் படிகளில் ஏறத் துவங்கினாள்.

“உனக்கும் என்னைப் பிடிக்கும் என்று தெரியும் ” பின்னால் இருந்து கத்தினான்.

ஒரு நொடி நின்றவள் படிகளில் இறங்கி மீண்டும் அவனிடம் வந்தாள்.

“என்றோ பெய்த மழையில் நனைந்து போன காகிதம் நான் .. புதிய கதை எழுத முயற்சிக்காதே …” அவன் எதிர்பாராத தருணத்தில் முத்தமிட்டு விட்டு விடுதிக்குள் ஓடத் துவங்கினாள் , கண்ணீரைத் துடைத்துக் கொண்டே…

அந்த ஊரிலேயே மிகப் பிரபலமான விபச்சார விடுதியின் பூட்டப் பட்ட கதவுகளின் முன்னே அவன் நின்று கொண்டிருந்தான் நீட்டப் பட்ட ஒற்றை ரோஜாவுடன்.

தொடரும் (மருதம்)

———————————————————-