Tags

,

ஒன்பது மாத சொச்சம்

விடாது பெய்திருந்த மழையின்

மறுநாளில் கண்டெடுத்திருந்தார்கள்

அந்தக் களிமண்ணை …

 

எத்தனை முறை வேண்டுமானாலும்

எப்படி வேண்டுமானாலும்

எதற்கு வேண்டுமானாலும்

எதற்குள் வேண்டுமானாலும்

மாற்றிக்கொள்ள

மாறிக்கொள்ள முடிந்திருந்தால்

ஊரில் எல்லாருக்கும் அதைப் பிடித்திருந்தது …

 

தண்ணீரைப் போல என்றாலும் – அது

தண்ணீரல்ல களிமண் என

மறந்து போனார்கள் …

 

அதைக் கண்டெடுத்த குயவன்

அவன் பழக்கப்படி பானையாக்கலாம் என்றான் …

 

பக்கத்து வீட்டுக்காரர்கள் அதுதான் சரி என்றார்கள் …

 

ஊரின் உபாத்தியாயர்

அ னா ஆ வன்னா சொல்லிக்கொடுத்து

வேலைப்பாடுகள் கொண்ட கூஜா ஆக்கினால்

பட்டணத்திற்கு விற்கலாம் என்றார் ..

 

பக்கத்து வீட்டுக்காரகள் அதுதான் சரி என

பிரம்பெடுத்துத் தந்தார்கள் …

 

அந்தத் தெருவின் சாயமிடுபவன்

நிறப்பூச்சுப்பூச்சு செய்தால்

வெளிநாட்டில் மவுசு என்றான் …

 

பக்கத்து வீட்டுக்கார்கள் அது தான் சரி என

அதற்கு முன் விலைபோன

உறவினர்களின் பானைகள் பற்றிய கதைகளை

விடியும் வரை பேசியிருந்தனர் …

 

யார் விருப்பப்படியும் மாறிக்கொண்டே

இருக்க முடிந்ததால்

எதுவாகவும் ஆகமுடியவில்லை களிமண்ணால் …

களிமண்ணாகவே இருந்தது

கடைசி வரைக்கும் …

 

களைத்துப் போன எல்லாரும்

அதை என்ன செய்வதென்று தெரியாமல்

குப்பைத்தொட்டியில் போட முடிவு செய்தனர் ..

 

எல்லாரும் உறங்கிய நள்ளிரவில் ரகசியமாய்

பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் ..

ஒரு முறையாவது வாய் திறந்து

அதற்கு என்ன வேண்டுமென பேசியிருந்தால்

அது களிமண்ணாகவே இல்லாமல்

இருந்திருக்கக் கூடுமென ….

 

—————————————————————————————-