Tags

காற்றில் உதிரும் நிறங்கள்

பயணக் குறிப்புகளுடன் சேர்த்து என்னிடம் சில வினாக்களும் இருக்கின்றன. சமயங்களில் இருப்பினை உறுதி செய்யக் கேள்விகளாவது கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ‘ம்’ என்ற பதில் கேட்க யாருக்குத்தான் ப்ரியம் இருக்காது.  நீ சொல்லப்போவது என்னவென்று தெரிந்த பின்பு, உன்னிடம் கேட்காமல் இருப்பதே பதிலினை எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கான அமைதி பெரும் ஒரே வழி.  

இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறாயா இந்தக் கடிதங்களை ? எனில், எனது முதல் கேள்வி இது தான், உனக்கும் எனக்குமான தொடர்பு இந்தக் கடிதங்கள் மட்டுமே என்றான பின்பு நான் வேறென்ன செய்ய ?

விழிப்பிற்கும் உறக்கத்திற்குமான பல இரவுகளின் போராட்டத்திற்குப் பிறகு  தூக்க மாத்திரைகளைப் போல அவ்வப்பொழுது இந்தக் கடிதங்களை எழுதுவது தவிர்க்க முடியாமல் போகின்றது. இன்னும் ஒரேஒருமுறை உனைக் காண வேண்டும் போன்ற வழக்கமான பிதற்றல்களை இந்தக் கடிதத்தில் தவிர்க்க முயற்சிக்கிறேன். இந்தக் கடிதம் எனது பயணக்குறிப்புகள் பற்றிச் சொல்ல மட்டுமே என நிச்சயமாய் தெரியாத போதும்.

நிறங்களால் ஆன ஆஸ்பென் உனக்கு நிச்சயம் பிடிக்கும். என்ன நிறம் பிடிக்கும் என்று கேட்டதற்கு எல்லாமே என்றாய். கருப்பும் வெள்ளையும் கூட நிறங்கள் தான் என்பது தெரியுமா உனக்கு. என்னிடம் இருப்பது அந்நிற நினைவுகள் மட்டுமே. நீ எடுத்துச் சென்றுவிட்ட மீத நிறங்கள் எல்லாம் இங்கே காற்றில் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. உன்னோடு நடந்து சென்ற பாதைகளின் சாயல்களையே ஏன் என் தனியான பயணங்கள் எல்லாம் கொண்டிருக்கின்றன ? நீயும் இங்கே இருந்திருக்கலாம். நிறங்களால் ஆன ஆஸ்பென் எனக்கும் பிடித்திருக்கும்.

இலையுதிர்காலத்தில் ஆஸ்பென்  இன்னும் அழகாய் இருப்பதாய் சொல்கிறார்கள். ஓடி ஓடிச் சென்று புகைப்படங்களுக்குள் அடைக்கிறார்கள். அடுத்த நிழற்படத்திற்குப் புன்னகைக்கும் அவகாசம் கூட இன்றி காற்றினால் களவாடப்படும் இலைகளின் ஓலங்கள் மட்டுமே எனக்குக் கேட்கின்றன. உதிர்ந்து செல்லும் இலைகள் பற்றிப் பாட மரங்கள் எல்லாம் மௌனத்தைத் தேர்ந்தெடுத்துவிட்ட பின்பு வேறெந்த மொழி என்னிடம் மிஞ்சும். இலையுதிர்காலம் என்பது அழகிய கனவொன்றின் முடிவா இல்லை வசந்தகாலம் பற்றிய புதிய கனவொன்றை எதிர்பாத்துத் துவங்கும் குளிர்கால உறக்கமா?  

இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறாயா இந்தக் கடிதத்தை ? எனில் இந்தக்கிளைகள் மீண்டும் பூக்குமெனச் சொல்லேன் என்னிடம். என் பாதைகள் மொத்தமும் வியாபித்திருக்கும் சருகுகளை மறந்துவிட்டு நானும் பயணித்திருப்பேன்.  

——————————————————————————