Tags

சர்வம்-2

சர்வம்-2

அபூர்வாவை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது . யாருக்குத் தான் பிடிக்காமல் போகும் இவள் போன்ற ஒரு பெண்ணை . அபூர்வா . அவளை நான் சந்தித்தது எல்லா காதல் கதைகளிலும் வருவது போல , தாவணி கட்டிக் கொண்டு , பூ வைத்துக் கொண்டு ஏதோ ஓர் கோவில் பிரகாரத்தை அவள் சுற்றி வரும் போதல்ல .. முதலில் .கோவிலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , இது காதல் கதையுமில்லை .

எங்கள் சந்திப்பு சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டதா எனத் தெரியாது எனக்கு .ஆனால் அவளை நான் பார்த்த வினாடியில் தான் எனக்கான சொர்க்கம் நிச்சயிக்கப்பட்டது . அம்மா கிடையாது எனக்கு . அப்பா … இருக்கிறார் .. எங்கோ உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வினாடிகளைக் காசாக்கிக் கொண்டு . எனக்கென்று யாரும் கிடையாது . எந்த பொறுப்பும் கிடையாது .பெண்பார்க்கக் கூட தூரத்து பெரியம்மாவைத் தான் கூட்டிக் கொண்டு போயிருந்தேன் .

அதிகபட்சம் ஆறு நாட்கள் காதலித்திருப்பேன் . அதற்குள் எல்லாம் முடிந்து , இப்பொழுது என் மார்பில் அவள் காதனியின் அச்சுப் பதியும் தொலைவில் இருக்கிறாள் . நிறைய படித்துவிட்டேன் . நிறைய வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்தும் இட்டாகிவிட்டது . இனிமேல் மை நிச்சயம் தீராது எனத் தீர்மானித்த ஒரு நாளில் தான் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று தோன்றியது . நேர் கோட்டில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கைக்கும் சில திருப்பங்கள் தேவைப்பட்டன .

இனி எதுவுமே இல்லை என்கிற புள்ளியில் காதலைப் பற்றி யோசி என்ற ஜென் தத்துவம் எனக்கும் தெரியும் . ஆனால் நான் காதலிப்பேன் என்றோ , எனக்கென ஒரு குடும்பம் என்றோ நான் யோசித்ததேயில்லை .

புத்தகத்தையும் , இசையையும் தவிர எந்த நண்பர்களும் கிடையாது . என் ஆடம்பர பின்னணி இல்லை என் இயற்கையான பாவம் காரணமாக இருக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன் . இல்லை என் மொத்த வாழ்க்கையையும் அபூர்வாவுடன்

வாழ்வதற்காகவே சேர்த்து வைத்திருந்திருக்கிறேன் . அதிக பட்சம் நான் பேசியது காகிதங்களிடம் தான் . பாவைகளுக்கு எங்கே செல்ல .

நான் சொல்லவந்ததே வேறு .. அவளை எங்கே பார்த்தேன் என்று தானே . இப்படித்தான் அவளைப் பற்றி நினைத்தாலே எங்கெங்கோ சென்றுவிடுகிறது மனது . ஒருமுறை கோயம்புத்தூர் சென்று கொண்டிருக்கும் போது வழியில் வலது கையை நீட்டி விரல்களை மடக்கி கட்டை விரலை மட்டும் உயர்த்தி மேலும் கீழும் ஆட்டிக் கொண்டிருந்தால் . பொதுவாகவே நான் யாருக்கும் லிப்ட் தருவதில்லை . இவளை பெண் . இரவு வேறு . நிற்காமல் சென்று விட்டேன் . ரிவயு கண்ணாடியில் பாவம் போல் காலை ஒருமுறை உதைத்துவிட்டு மைல் கல்லில் உட்கார்வது தெரிந்தது . அந்த மாதத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் மழை விழத் தொடங்கியது . ஏனென்று தெரியவில்லை . வண்டியை நிறுத்தினேன் . வேகமாக ஓடி வந்தாள் .

“சார் , கோயம்புத்தூர் வரைக்கும் போகணும் … வந்த கார் பிரேக் டவுன் .. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க .. ப்ளீஸ் ” அந்த குரலுக்கு யாரும் மறுக்க முடியாது .

“நான் மட்டும் தனியா இருக்கேன் . நம்பிக்கை இருந்தா ஏறிக்கலாம்” கல்லூரியில் சொல்வார்கள் எனக்கு பெண்களிடம் எப்படிப் பேசுவது எனத் தெரியாது என்று .

“நம்பறேன் சார் .. பின் சீட் முழுசும் காலியா தான் இருக்கு . எனக்கு போது ” சிரித்துக் கொண்டே ஏறிக் கொண்டாள்.

பின் இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவேயில்லை . மூன்று முறை ரிவயுவில் பார்த்த பொழுதும் கண்களை மூடிக் கொண்டு தியான நிலையில் இருந்தாள் தம்புரா மீட்டும் மீரா போல் . நீல நிற சேலை அணிந்திருந்தாள் . அது தான் பிடித்த நிறமாம் .

போன வாரம் கூட அவளுக்கு மூன்று சேலைகளும் எனக்கு ஒரு ஜீன்சும் அதே நிறத்தில் எடுத்து வந்தோம் . எனக்கு மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றியது . பார்த்தால் தவறாக நினைத்துக் கொள்வாள் என கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டேன் . ஏதோ ஒரு பெண்கள் விடுதி முன் இறங்கிக் கொண்டாள் .

“ரொம்ப தாங்க்ஸ் சார் ” என் பரவா இல்லைங்கவை எதிர் பார்க்காதவளாய் கேட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள் . எதையோ எதிர்பார்த்து ஏமார்ந்தவனாய் கியர் மாற்ற மனமில்லாமல் கிளச்சை மிதித்துக் கொண்டிருந்தேன் . நிமிர்ந்த பொழுது எனக்கு வெகு அருகில் கார் ஜன்னலில் கைகளை மடித்து குனிந்த வண்ணம் அவள் .

மூன்று விரல்களைக் காட்டி “நான் பார்த்தேன் ” சொல்லி விட்டுப் புன்னகையோடு போய் விட்டாள் . எனக்கு தான் சுய உணர்வு திரும்பவே நேரம் ஆனது .வீட்டிற்கு வந்த பின் தான் உறுத்து அவள் பெயரையாவது கேட்டிருக்கலாம் என்று . “பெயர் தெரியாமல் என்ன சார் பண்ண முடியும் ” வாட்ச் மேன் வரை முயன்றாகிவிட்டது .விடுதி முன் முடிந்த அளவு நேரம் செலவிட்டாகி விட்டது .

இந்த நான்கு நாட்களில் மட்டுமாவது பதினைந்து பெட்டி சிகிரெட்டு களாவது புகையாக்கியிருப்பேன்.நமக்கு அவ்வளவுதான் போல என்று ஐந்தாவது நாள் வேலைக்குச் சென்று விட்டேன் .

பதினொன்றாவது மாடியில் என் அலுவலகம் . மூன்றாவது புளோரில் என்னுடன் லிப்டில் கூட வந்த பிந்துகோஸ் இறங்கிக் கொண்டது . ஐந்தாவது புளோரில் ….. எனக்கு கூட கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கிறது . கிள்ளிப் பார்த்துக் கொண்டேன் . ஏனெனில் பலமுறை கனவில் பார்த்து ஏமார்ந்தாகிவிட்டது . ஆனால் அவள் கொஞ்சம் கூட ஆச்சர்யம் இல்லாதவள் போல் ஹலோ சார் என்றாள் . நீல சுரிதார் இப்பொழுது . ஒன்பதாவது புளோர் வரை யோசித்துக் கொண்டே வந்தேன் . நேரத்தை வீணாக்க விரும்பாமல் அவள் பக்கம்

திரும்பினேன் .

“உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன் .”

ஸ்ஸ்ஸ்ஸ் ….. ஏதோ புலம்புகிறாள் … என் பெயர் தான் சொல்கிறாள் தூக்கத்தில் . தூக்கத்தில் கூட எத்தனை அழகு ஒரு ஓவியம் போல் . மாருதியின் ஓவியங்கள் பார்க்கும் போது வியந்திருக்கிறேன் இவ்வளவு உயிரோட்டமான கண்கள் கொண்ட பெண்கள் உண்டா என்று … இப்பொழுது கேட்டுப் பாருங்கள் . இன்னும் ஓவியத்தில் அவர் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய என்பேன் .

மொத்த ஜீவனும் தேங்கி நிற்கும் விழிகளை என் இமைகளால் மூடும் உரிமை எனக்குண்டு தெரியுமா …அந்த புன்னகையைப் பற்றி நான் மீண்டும் சொல்லியேயாக வேண்டும் . என் உதடுகள் கூட அதை அப்படியே பிரதி எடுக்க முயன்று கொண்டிருக்கின்றன . நிரந்தரமாக வேண்டவே வேண்டாம் . ஒவ்வொரு முறையும் அவள் உதடுகளில் இருந்தே எடுத்துக் கொள்கிறேன் . மறுபடியும் புன்னகைக்கிறாள் பாருங்கள் . என்னால் எதுவுமே செய்ய முடிவதில்லை . யோசிக்க முடிவதில்லை .அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் போல் ஆகி விடுகிறேன் . ஆறு மணிக்கு தான் எழுந்திருப்பாள் . இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது . அதற்குள் யோசித்தாக வேண்டும் எப்படி அவளைக் கொல்வது என்று .