Tags

 

 

 

இன்னும் ஓர் வருடம் .. கல்லூரி நாட்கள் முடிந்து போய் ..

 

பார்க்கையில் சில பிரிவுகள் அவசியம் தேவை என்றே தோன்றுகிறது . சென்ற வருடம் போன்ற , உணர்ச்சிவயப்பட்ட மன நிலையில் எதையும் எழுதத் தோன்றவில்லை. இது ஒரு மறக்க முடியாத நாள் என்பதில் மட்டும் எந்த மாறுதலும் இல்லை .

 

மனமும் , உடலும் கொஞ்சமேனும் மாறி இருக்கின்றன. பார்க்கும் பார்வைகளும் , அவைகள் குறித்தான அவதானிப்புகளும் வேறு விதமாகியிருக்கின்றன. தினம் பேருந்தோ ஏதோ ஒன்று ஏறி  அலுவலகம் செல்லும் கட்டாயங்களாலும் , கண் எதிர் படும்  உணவகங்களில் பசியாறும் பழக்கங்களாலும்  , எனக்காக வாழ்ந்த நாட்கள் ice age காலத்திய மாமூத் யானையின் தந்தங்களாய் மனதின் கீழ் அடுக்குகளில் உறைந்து கொண்டிருக்கிறது .

 

எல்லாவற்றையும் ஓரளவாவது நிதனாமாகப் பார்க்கப் பழக்கமாகியிருக்கிறது .கல்லூரி நாட்களில் இருந்தது போல் அதிக சந்தோசம் , துக்கம்  இரண்டுமே அவ்வளவாக இல்லை . சொல்லப் போனால் கடைசியாக கண்ணீர் பார்த்ததெப்பொழுது என நினைவில்லை. ரௌத்திரமும் திமிரும் மட்டும் அப்படியே இருக்கிறது .எனக்கு இரண்டுமே வாழ்வைச் செலுத்தும் ஆதாரங்கள் போல .

 

பெண்கள் குறித்தான ஈர்ப்பும், குறுகுறுப்பும் , ஆர்வமும் வெகுவாக மாறியிருக்கிறது . தேவதைகள், பூக்கள் எல்லாம் தொலைந்து போய் , share auto வில் வியர்த்துக்கொண்டு  கூட வரும் சக பயணியாகப் பார்க்கப் பழக்கமாகியிருக்கிறது.

 

கைபேசியுடனான உறவு குறைந்திருக்கிறது . சில நண்பர்கள் அழைத்தால் ஓரிரு நிமிடங்கள் தாண்டி பேச எதுவுமில்லாமல் மௌனங்களால் நிரப்ப வேண்டியிருக்கிறது .அழைப்பைத் துண்டித்ததும் , விஷயமே இல்லாமல் பேசிக் களித்த இரவுகள் நினைவில் வந்து போகின்றன.

 

சமீபத்தில் கல்லூரி சென்று வந்தபொழுது உணர்ந்தது இவைகளைத் தான் .

 

இது என் கல்லூரி அல்ல . கல்லூரி என்பது வெறும் கட்டிடங்களாலும் மரங்களாலும் மட்டும் ஆனது அல்ல. அது உணர்வுகளால் நிரம்பியது.நம்முடன் படித்த உறவுகளால் நிரம்பியது . நண்பர்களோடு களித்து மகிழ்ந்திருந்த அதே நாட்கள் என்றைக்கும் மீண்டும் கட்டமைக்க முடியாத ஒன்று .அந்த நாட்களில் பார்த்த ஓடாத ஒரு படம் கூட காலக் குறியீடாக நின்று போயிருக்கிறது. மீண்டும் ஏதோ ஒரு பேருந்துப் பயணத்திலோ இல்லை விடுமுறைக் கொண்டாட்டத்திலோ  பார்க்கையில் ,மனதில் அது ஏற்படுத்தும் தாக்கமும் அதிர்வுகளும் கூட இந்த கட்டிடங்கள் மட்டுமே நிறைந்த பூமி ஏற்படுத்த முடியாது .

 

இப்பொழுதிருக்கும் கல்லூரி வேறொரு கல்லூரி . நாங்கள் வாழ்ந்திருந்த கல்லூரியை , நாங்கள் கிளம்பும் போதே , அனைவரின்  பூட்டிய பைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடனேயே எடுத்து வந்துவிட்டோம் .