Tags

, , ,

 

 

சில இடைவெளிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன . சில காரணங்களுக்கெனவே பிரித்து  வைக்கப்பட்டிருக்கின்றோம். சில புரிதல்களுக்காகத்  தான்  வெயிலும்  வருகிறது .

 

கடந்த நான்கு நாட்கள் பெங்களுரு மெட்ரோவில் .வெயில் படாத பிரதேசம் அது. கொஞ்சமேனும் வெயில் தலை காட்டினாலும் கூடவே மழை விரட்டி வருகிறது .

 

சென்னையின் வெயிலுக்கு பயந்து கொண்டு ஒரே ஒரு சட்டை மட்டும் அணிந்து கொண்டு ரயிலேறி , கே.ஆர்.புரத்தில் இறங்கிய பொழுது மணி அதிகாலை நான்கு. இறங்கியதுமே குளிர் ஒரு சட்டைக் கையின் வழியாக ஏறி மறுபுறம் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தது.ஆனால் நன்றாகவே இருந்தது அந்தத் தழுவல். பாலா (உங்களுக்கு வழிப்போக்கன் பாலா ) ஜெர்கின் எல்லாம் போர்த்திக் கொண்டு , கடமை உணர்ச்சியுடன் ஹெல்மெட் அணிந்து கொண்டு (நான்கு  மணி !!!) ஒரு செட் அப் ஆகத் தான் வந்திருந்தார்.

 

வீட்டுக்குப் போனதும் தனியாக மெத்தை எடுத்துப் போடுகிறார். போர்த்திக் கொள்ள நமீதா போர்வை குடுக்கிறார் .காலை எழுந்தால் பற்பசையோடு நிற்கிறார். இன்னொரு கையில் சூடாக  ஹார்லிக்க்ஸ்.குளிக்க வெந்நீர் போடட்டுமா என்ற கேள்வி வேறு. வேண்டாமப்பா இந்தத் ‘தண்’ணீருக்கு மார்கழிவரை காத்திருக்க வேண்டும் சென்னையில்.எனக்கு இதுவே போதும். குளித்து விட்டு வந்தால் தேங்காய் சட்னி அரைத்து தோசை வேறு சுட்டு வைத்திருக்கிறார். டேய் நீ எல்லாம் ஒரு பேச்சுலரா ?? ஷேம் ஷேம் … அதாகப்பட்டது இந்தப் பாரா எதுக்காகன்னா ஒரு நல்ல குடும்ப இஸ்த்தன் தயார்.பெண்கள் அணுக வேண்டிய முகவரிக்கு என்னைத் தொடர்பு கொள்ளவும் .

 

அது வியாழக் கிழமை என்பதால் பாலா ஆணிகளை கவனிக்க ஆப்பீஸ் சென்று விட்டான் .அழுது கொண்டே சத்யாவும் . “தேவதைகள் என்று தனியாக யாரும் பிறப்பதில்லை.தங்கைகளாக விரல் பிடித்து கூடவே தான் வருகின்றார்கள் ” இது வெகு நாட்கள் முன்பு ஒரு பால்வாடிக் கவிஞன் எழுதியது.ஒவ்வொரு முறை வீட்டுக்கு சென்றதுமே அம்மா கேட்கும் முதல் கேள்வி “அடுத்து எப்போடா வருவ?”.அம்மாவிற்கு அடுத்து என்னிடம் அதிகமாக இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருப்பது சத்யாதான்.

 

அந்த ஒரு நாள் பகல் முழுவதும் சத்யாவின் அம்மா கையால் நல்ல சோறு சாப்பிட்டுக் கொண்டு , கொஞ்சம் மெகா சீரியல் பார்த்துக் கொண்டு பொழுது போயாகிவிட்டது. மாலை சத்யாவுடன் கொஞ்ச நேரம் இருந்து விட்டு அகாராவில் இருந்து கிளம்பினேன்.

 

மார்த்தஹல்லியில் பாலா பைக்குடன் , ஆணி பிடுங்கிய களைப்புடன் இருந்தான். எனக்கென்னவோ வண்டியில் பின்னால் உட்கார்ந்து கொண்டு செல்லத் தான் பிடித்திருக்கிறது .இரு கைகளையும் நீட்டிக் கொண்டால் காற்றைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்வது போல் இருக்கும் .

 

அடுத்த நாள் பாலா , சத்யா ,  v c , மூவருமே விடுப்பு எடுத்திருந்தனர் வேறு வேறு பொய் சொல்லி 😉 அந்த நாளுக்கான நல்ல சோறு ஸ்பான்சர்டு பை V C மம்மி. ஒன்றுமே செய்யாமல் கேரம் ஆடிக் கொண்டும் ,சாப்பிட்டுக் கொண்டுமே பொழுது போக்கினோம்.இடையிடையே மின்வெட்டு புண்ணியத்தில் (இதுக்கும் ஆற்காட்டாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ;-)) யாவரும் நலம் , அருந்ததி ,பட்டாளம் ,1977 (பயபடாதீங்க , முதல் அஞ்சு நிமிசத்துக்கே கண்ணைக் கட்டிடுச்சு ) மாத்தி மாத்தி பார்த்தோம் . End of the day இல் புரிஞ்சுகிட்ட Moral of the story என்னன்னா , கேரம் ஆடினா VC அப்பா கூட பாட்னர்ஷிப் வச்சிக்கணும். நாமளும் படுத்துக் கொண்டே ஜெயிக்கலாம்  (நானும் கூட பாலிடிக்ஸ் ல சேரலாமோ ) .

 

 

மறுநாள்  முந்தைய பாராக்களில் ஏற்கனவே வந்தவர்களோடு , பால கிருஷ்ணன் என்கிற ஐன்ஸ்டீன் மண்டையன் , பிரியா , சௌமியா ஆகிய ஜூனியர் வானரங்களும் சேர்ந்து கொண்டு ஒரு கேரவேனில் (டான் ட டட்டட டாடடா ….. டான் ட டட்டட டாடடா .. இதுக்கு முன்னாடி இத நமீதா வச்சிருந்தாங்களாம் 😉 ) கிளம்பி ரங்கன் திட்டு ல இருக்கற பறவைகள் சரணாலயத்திற்கு போனோம். இது வேற பறவைங்க .. உங்கள மாதிரியே Bird watching ன்னு சொன்னத நம்பி நானும் ஏமார்ந்துட்டேன்.

 

boatting போலாமான்னு கேட்டாங்க . நானும் அதுகென்ன ஒன்னுக்கு நாலு வாட்டி போலாமேன்னு கொஞ்சம் கம்பீரமாச் சொல்லிப்புட்டேன் . ஏறுனதுக்கப்பறம்  தான் சொல்ராய்ங்க ..

 

தம்பி அதோ தூரமா தெரியுதுல கண்ணு மாதிரி ..

 

ஆமாங்க ..

 

நல்லா பார்த்துகோப்பா .. அது தான் முதலை ..

 

எனக்கு அப்டியே ஸ்டோமக்கு குள்ள ஒரு சத்தம் வந்துச்சு பாருங்க ..

 

அந்த போட்டிங் பயணத்தில் நடந்த சில ‘ருசி’கர (முதலைக்கா !!) சம்பவங்கள் .

 

******

சம்பவம் 1:

 

நான்: நாங்கெல்லாம் முதலைக்கு பயப்படற ஆளா … என்ன ஒரு ரெண்டு முதலை மொத்தமா இருக்குமா இங்க .. (ஏற்கனவே அந்த ரெண்டையும் தொலை தூரத்தில் பார்த்த நிம்மதியில் )

 

போட்டோட்டி (ஆஹா ! என்ன பதம் !!! )  .. ரெண்டா .. மொத்தம் எறநூறு இருக்கும் குரு ..

 

நான் : !!!! (இந்த போட் லையே மொத்தம் பத்து பேர் தானடா இருக்கோம் ).

 

 

*******

சம்பவம் 2:

 

சத்யா : ஹே அங்க பாரு ! அந்தப் பறவை எவ்ளோ அழகா மீன் பிடிக்குது பாரேன் ..

 

பாலா: அழகா இருக்கா இல்லையான்னு அந்த மீன் கிட்ட கேப்போமா …

 

நான் : (எவனாவது , ஹே அந்த முதலை அழகா இருக்கு பாரேன்னு சொல்லுவாங்களோ !!! )

 

*****

சம்பவம் 3:

 

VC மம்மி : சீனி ! முதலைக்கெல்லாமா பயப்படறது .. எப்பவோ ஆனந்த விகடன் ல படிச்சது .. ஒரே ஒரு தடவை ஒரு குழந்தை கைய்ய கடிச்சிருக்கு .. அவ்ளோ தான் .. மத்தபடி ஒன்னும் பண்ணாது ..

 

நான் : !!!!

 

சத்யா : சீனி ! சீனி !  அந்த முதலிய ஒரு போட்டோ எடுத்து குடேன் ..

 

நான் : #%&#$&$&$

 

*******

சம்பவம் 4:  

 

இந்த சம்பவம் சம்பவம் ன்னு சொல்றாங்களே .. அப்டீன்னா இன்னாதுடா …

 

*******  

 

ரங்கன் திட்டுக்கு அப்பறமா பேல்பூரி..  ச்சீ இல்ல .. பானிபூரி .. ஐயோ .அது என்ன இடம் டா பாலா .. எத்தன தடவ  சொன்னாலும்   .. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் …

 

sounds like  பேல்பூரி -ங்கர ஒரு இடத்துக்கு போனோம் . அணைகட்டு மாதிரி இருந்தது ..  அடுத்த வாரத்துக்கும் சேர்த்து குளிச்சிட்டு கெளம்பினோம் . ஆஹா எருமை மாடுகள் தான் எத்தனை சுகவாசிகள் .. ஏறு போல் நட என்று சொன்னவனே , எருமை போல் நட என்று சொல்லியிருக்கக் கூடாதா !!!!  

 

 

ஒருவழியா  சுமார் நாலரை மணிக்கு வீட்டுக்கு திரும்ப அப்பீட்டு ஆனோம் .

 

வருகிற வழியில் கேரவேனில்  பிரசெண்டேஷன் செர்மனி .ஆமாங்க அன்னைக்கு தான் நான் பொறந்தேனாம் . பாலா சத்யா VC தாண்டி என்னால எங்க நண்பர்கள் குழுல இருந்த அத்தனை பேரையும் உணர முடிஞ்சது .

 

தம்பி , லேப்டாப் வாங்குன்னு சொல்லி ஒரு ஹெட் போன்ஸ் வாங்கிக் குடுத்தாங்க. சத்யா கல்லூரி நாட்களை நினைவு படுத்தற மாதிரி கொஞ்சம் புகைப் படங்களை கொலாஜ் பண்ணி குடுத்திருந்தா. அப்பறம் விஞ்ஞான சிறுகதைகள் சுஜாதாவோடது ..

 

அப்புறம் பாலா பிங்க் கலர் ல பேக் பண்ணின ஒரு புத்தகம் குடுத்தார். என்ன புத்தகமா இருக்கும்ன்னு ஒரு ஆர்வத்துல பிரிச்சேன்.புத்தகத்தின் பெயர் “என் நிழலின் முகவரி ” பை ரெஜோவாசன் . என்னோட சிறுகதைகள் அழகாகத் தொகுக்கப்பட்டு புத்தகமாக இருந்தது என் கைகளில் . இப்பொழுது வரை அந்த கணத்தை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை . ஏண்டா இப்படியெல்லாம் பண்றன்னு அவன் சட்டையை பிடித்து கேக்கணும் போல் இருந்தது .

 

பிறந்த குழந்தையை , முதன் முதலில் தூக்கும் தந்தையின் ஸ்பரிச உணர்வுகளும் , உள் அதிர்வுகளும் எப்படி இருக்குமென எனக்குத் தெரியாது.  ஒருவேளை இது போலத் தான் இருக்குமா எனத் தோன்றியது .

 

அன்று இரவு மொட்டைமாடியில்   இரவு வெகுநேரம் வரை பனியோடு பேசிக் கொண்டிருந்தோம் இருவரும் . என்ன செய்யப் போகிறோம் , என்ன படிக்கலாம் , எப்பொழுது திருமணம் .. இன்னும் நிறைய .. இலக்கில்லாமல் நாங்கள் இருவரும் பேசியிருந்த கல்லூரி நாட்களின் இரவுகள் மீண்டும் எங்களை இழுத்துக் கொண்டிருந்தது . வயது குறைவது போல் இருந்தது .

 

ஏனோ எனக்கு மழையும் , குளிரும் பிடித்த அளவு வெயில் பிடிக்கவில்லை என்றேன் . சிரித்துக் கொண்டே பாலா சொன்னதை கடைசி வரியில் சொல்கிறேன் .

 

அடுத்த நாள்  , நவீனைப் பார்த்துவிட்டு , கொஞ்சம் புகைப்படங்களை வாங்கிக் கொண்டு மீண்டும் சத்யாவின் வீடு .  கிளம்பும் வரை திரும்ப எப்போ வருவ என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். 

 

இரவு பத்து மணிக்கு சாந்தி நகரில் பஸ். பாலா வீட்டில் இருந்து கிளம்புகையில் நல்ல மழை . ஆட்டோவில் செல்கையில் , வழிதவறி முகத்தில் மோதியிருக்கும் சாரலை ரசித்துக் கொண்டிருந்தேன். இந்த சாரலுக்கும் , ஒரு கோப்பைத் தேநீருக்கும் சென்னையில் இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று தோன்றியது .

 

சாந்தி நகரில் இறங்குகையில் நிலையம் முழுவதும் தண்ணீர் . காலணி எல்லாம் நனைந்து போனது .இடம் தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து பேருந்தில் உட்காருவதற்குள் நன்கு நனைந்து போனேன் . இரவு முழுவதும் காலில் ஈரம் பிசுபிசுத்துக் கொண்டே இருந்தது . காலை ஐந்து மணிக்கு கோயம்பேடு . ஒரு உணர்ச்சி வேகத்தில் AC பஸ்ஸில் ஏறிவிட்டேன் . குளிர் தாங்க முடியவில்லை . கைகளை இறுகக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன் .

 

வேளச்சேரியில் இறங்கிய இடத்தில் வெயில் ஆரம்பித்திருந்தது . நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு சொன்னேன் .. “ஆஹா வெயில் !”

 

பாலா சொன்னது இது தான் . ” மழையை ரசிக்க கொஞ்சம் வெயிலும் வேண்டும் “

 

 

டிஸ்கி  1:

 

என் பிறந்த நாள் முழுவதும் வாழ்த்துச் சொல்லிக் கொண்டு , உணர்வுகளால் என்னுடனேயே இருந்த தமிழ் மன்ற நண்பர்கள் மற்றும் சுந்தர் நவீன் விஜய் க்கு என் அன்புகள் . நட்பில் நன்றிகளுக்கு இடமில்லை . எப்பொழுதும் இதே போல் உடனிருக்கும் வரம் மட்டும் கேட்கிறேன் . 🙂

 

 

டிஸ்கி 2 :

 

பெங்களுரு தெருக்களில் சுற்றித் திரிகையில்  ஏனோ சொக்கனும் , அனுஜன்யாவும் அடிக்கடி நினைவில் வந்து போனார்கள் .

 

 

——————————————————————————–