Tags

  

            “When I saw you I fell in love, and you smiled because you knew. “

 

                                                                                     — William Shakespeare

 

அவள் சிரித்தாள் அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் முதல் முறை பார்த்த பொழுது சிரிக்கவில்லை.

மிக இயல்பாக சென்று கொண்டிருந்த வாழ்கை மொத்தமாக மாறிப் போனது அவளைப் பார்த்த அந்த வினாடி. என் எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலாக இருந்தது எங்கள் முதல் சந்திப்பு.

ஜூன் 18, மணி மூன்று பதினான்கு .. அவளைச் சந்திப்பதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பு,

“பிரபு , ஒரு ரெஸ்யூமே அனுப்பிருக்கேன் .. ஆர்த்தி ரீப்ளேஸ்மென்ட்.. எவாலுவேட் பண்ணி சொல்லு ” மல்லிகா, என் ப்ராஜெக்ட் லீட். இரண்டு வாரங்களில் அவர் டென்வர் செல்வதாக இருந்ததால் அடுத்த லீடாக நான் தேர்வாகியிருந்தேன். ட்ரான்சிஷன்  பீரியடில் இருந்தேன்.

மல்லிகா

“ம்ம .. சொல்லுடா ..”

“இந்த ரெஸ்யூமே வேணாம்னு சொல்லிருங்க …”

“ஏன்டா ? என்ன பிரச்சனை ?”

“நல்ல அகாடமிக் மார்க்ஸ்.. அண்ணா யுநிவர்சிட்டி … ட்ரைனிங்ல டாப்பர் ..”

“அப்பறம் என்னடா பிரச்சனை ? ”

“என்ன பிரச்சனைனா , கேண்டிடட் பொண்ணு .. ஏற்கனவே டீம் ல பதினாலு பேர்ல எட்டு பொண்ணுங்க … நைட் ஷிப்ட் பிரச்சனை வரும் .. பையனை எடுத்தா பிரச்சனை இல்லேல .. அதுவும் இல்லாம ப்ரெஷர் வேற .. எல்லாத்தையும் சொல்லித் தரணும் மொதல்ல இருந்து ..”

“பொண்ணுங்கறத எல்லாம் ஒரு காரணமா சொல்ல முடியாது தம்பி ..  நேர்ல கூப்ட்டு பேசு .. எதாவது காரணம் கண்டுபிடிச்சு சொல்லு …திருப்பி குடுத்திடலாம் … ”

“வேற யாரையாவது பண்ண சொல்ல வேண்டியது தான ..”

“ஒரு பொறுப்பு குடுத்தா தட்டிக் கழிக்கக் கூடாது …”

ரெஸ்யூமில் அவளது எண் இருந்தது. அழைத்தேன். காத்திருந்தேன். அத்தனை வருடங்களுக்குப் பிறகான கடைசி இரண்டு நிமிடக் காத்திருப்பு.

“ஹலோ திஸ் இஸ் வெண்ணிலா …”

முதல் முறையாக அவள் குரல். அவளது பெயர். நிச்சயமாக இந்தக் குரலைப் பலமுறை கேட்டிருக்கிறேன். எத்தனையோ யுகங்களாக இந்தக் குரலோடு உரையாடியிருக்கிறேன். கொஞ்சியிருக்கிறேன். சண்டையிட்டிருக்கிறேன். நிறையக் காதலித்திருக்கிறேன். அப்பொழுது தெரியாது நான் சந்திக்கப் போவது என் இத்தனை இரவுகளின் வெளிச்சத்தை என்று. இனிமேல் ஒவ்வொரு நொடியும் இந்தக் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்க என் நாட்கள் மொத்தத்தையும் தாரை வார்க்கப் போகிறேன் என்று.

“வெண்ணிலா ஹியர் .. ஹலோ …”

என்ன ஆயிற்று எனக்கு. வெறும் குரல் தானே. பேசு . என்னை நானே ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.

“ஐ ம் பிரபு .. ”

எல்லா விவரங்களையும் சொல்லி முடித்தேன்.

“மல்லிகா , அந்தப் பொண்ணு லைப்ரரில இருக்காளாம் ..”

“இங்க வர சொல்ல வேண்டியது தான …”

“இல்ல .. இந்த இடம் புதுசு இல்ல … நானே போய் கூப்டு வரேன் .. ” ஏதோ கள்ளம் செய்தவனைப் போலப் புன்னகை தோன்றியது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

“வேற யாரையாவது அனுப்ப வேண்டியது தான ..”

“இல்ல நானே போறேன் .. ஒரு பொறுப்பு குடுத்தா தட்டிக் கழிக்கக் கூடாது ..” கிட்டத் தட்ட ஓடினேன்.

“பிரபு .. ” மல்லிகா சப்தமாக  “இங்கே வா ..”.

மீண்டும் அருகே சென்று “ப்ச் .. சொல்லுங்க .. ”

“கொஞ்சம் கிட்ட வா .. சீக்ரெட் .. சத்தமா சொல்ல முடியாது ..”

குனிந்தேன்.

“ரொம்ப வழியுது .. போறதுக்கு முன்னாடி தொடச்சிட்டுப் போ ”.

 

ரெஸ்ட்ரூம் கண்ணாடியைப் பார்த்துத் துடைத்துக் கொண்டேன். தலைவாரிக் கொண்டேன். என் பையிலும் சீப்பு இருப்பதே அன்று தான் தெரிய வந்தது எனக்கு. விசிலடிக்க வேண்டும் போல இருந்தது. சுற்றிலும் பார்த்தேன் . யாரும் இல்லை. விசிலடித்தேன். திடீரென்று யாரோ கதவைத் திறக்கவே, ஒன்றும் தெரியாதவனைப் போல் சிரித்துவிட்டு நூலகத்தை நோக்கி ஓடினேன்.

நீண்ட நாட்களுக்கு முன்பே மறந்து போன கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டேன். ஏ ! மாயக் கண்ணாடியே , உலகிலேயே மிக அழகான பெண் யாரென்று கேட்டேன். நூலகக் கண்ணாடி  உள்ளே ஒரே ஒரு பெண் மட்டும் இருப்பதாகக் காட்டியது.

எங்கள் அலுவலகம் பதினோராவது மாடியில் இருக்கிறது. கன்னி மூலையில் என்ன இருக்கிறது, குபேரன் மூலையில் என்ன இருக்கிறது என்கிற ஞானம் எல்லாம் கிடையாது எனக்கு. ஆனால் நூலகம் இருந்தது கடல் மூலையில். நூலகத்தில் இருந்து பார்த்தால் தூண்டில் போட முடிகிற தூரத்தில் இல்லாவிட்டாலும், தொட்டு விடத் துடிக்கிற தூரத்தில் இரைச்சல் இல்லாத கடல் கண்களின் கரைகளுக்கு அலைகளை அனுப்பியபடி இருப்பது தெரியும்.

அவள் கண்ணாடிக்கு வெளியே நுரையில்லாமல் திரிந்திருந்த கடலை அள்ளி உடையாகப் போர்த்தியிருந்தாள். கொடுத்து வைத்தப் புத்தகம் ஒன்று அவள் மடியில் அமர்ந்திருந்தது. படித்துக் கொண்டிருந்த பக்கம் அழ அழ அடுத்த பக்கத்தைத் திருப்பிக் கொண்டிருந்தாள். ஏறி வாரிய முடி பின்னால் ஒரே ஒரு ரப்பர் துண்டினால் கட்டப் பட்டு , கொஞ்சமே சுதந்திரம் பெற்றிருந்தவைகள் பள்ளு பாடியபடி காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. கடவுளே ! பெண்களுக்கு ஏன் தான் இத்தனை உள்ளுணர்வு. பார்த்துவிட்டிருந்தாள்.

என்னை நோக்கி எழுந்து வந்தாள். ஒருமுறை எனக்குள் என்னை நானே அறிமுகப் படுத்திக் கொண்டேன். நீ தான் அந்த பாழாய்ப் போன பிரபுவா என்பது போல் பார்த்தாள். மிகக் கட்டுப் படுத்திக் கொண்டு சொற்களை உதிர்த்தேன்.

“ஹாய் ஐம் வெண்ணிலா ..” டாம்ன் இட். அவள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். சமாளித்துக் கொண்டு “ஆர் யூ வெண்ணிலா ?” என்றேன்.

அவள் சிரித்துக் கொண்டே தலை அசைத்திருந்தாள் அவ்வளவு அழகாக இருந்திருக்கும். ஆனால் சிரிக்கவில்லை. ஆம் என்று தலை மட்டும் அசைத்தாள். கொஞ்ச தூரத்தில் தெரிந்த மீட்டிங் ரூமிற்கு கை காட்டிவிட்டு நூலகத்திற்குள் நுழைந்தேன்.

முதல் முறையாக நூலகர் என்னைப் பார்த்திருக்கக் கூடும் அங்கே. புத்தகம் எடுக்க வந்தேன் என்றேன். சத்தியமாக அவர் பார்வை என்னை நம்ப வில்லை. வேகமாக ஓடிச் சென்று அவள் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து , அவரைப் பார்த்து சிரித்தபடி அதைக் காட்டினேன். அவரும் சிரித்தார்.

புத்தகம் பிஎஸ் ஐ லவ் யூ என்றது.

 

மீட்டிங் ரூமின் உள்ளே நுழைந்ததும் எழுந்து நின்றாள். இது ஒன்றும் கல்லூரி கிடையாது. இங்கே எல்லாரும் ஒன்று தான் என்று சொல்லிவிட்டு அமரச் சொன்னேன். அமர்ந்தாள். என்னைப் பார்த்தாள். டாம்ன் இட் .. நான் இன்னும் நின்று கொண்டிருக்கிறேன். உட்கார்ந்து அவளது ரெஸ்யூமைப் பார்ப்பது போல் பாசங்கு செய்தேன் ..

அவளிடம் கொஞ்சம் பதட்டம் தெரிந்தது. நான் அவளை விட நடுங்கிக் கொண்டிருந்தேன்.

“ஏன் நீங்க உங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லக் கூடாது ?” எல்லா நேர்முகச் சந்திப்புகளிலும் கேட்கப்படும் முதல் மொக்கைக் கேள்வி. நிச்சயம் இந்தக் கேள்விக்கான பதிலை அவள் வீட்டுக் கண்ணாடி பலமுறை கேட்டிருக்கும்.

அவள் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனாள். எனக்கு எதுவுமே ஓடவில்லை. நான் கொஞ்சம் கூட நில்லாமல் அலைந்து கொண்டே இருக்கும் அவள் கண்களையும் , காற்றுக்கு வலிக்காமல் மெல்ல ஒற்றி ஒற்றி வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்த உதடுகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் கன்னத்தில் சின்னக் கீற்று போல இருக்கும் தழும்பு எப்படி வந்திருக்கும் என்றும் , நீல நிறத்தைத் தவிர எந்த நிற ஆடை இவளுக்கு அழகாக இருக்கும் என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

 

எல்லாம் சொல்லி முடித்துவிட்டேன் என்பது போலப் பார்த்தாள்.

அவளுக்கு என்ன வேலை , எந்த நேரத்தில் வரவேண்டும் என்பது போன்ற ப்ராஜெக்டின் எல்லா விவரங்களையும் சொல்லி முடித்து , எங்களது குழுவிற்கு வர சம்மதமா என்ற இரண்டாவது கேள்வியைக் கேட்டேன். அவள் பதில் சொல்ல எடுத்துக் கொண்ட அந்த வினாடிகளில் இன்னும் இரண்டு சேர்ந்திருந்தால் என்னிதயம் வெளியே எகிறி குதித்திருக்கும்.

சம்மதம் என்றாள். இன்னும் இரண்டு நாட்களில் அவளுக்கு இருக்கும் கிளைன்ட் இன்டர்வியூவிற்கு பயிற்சி  எடுத்துக்கொள்ள நாளையிலிருந்து வரும்படி சொன்னேன். சரி என்றாள்.

எனது மூன்றாவது கேள்வியை அவள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டாள். ஏன் நானே கூட எதிர்பார்க்கவில்லை.

“என்னுடன் காஃபி சாப்பிட வருகிறீர்களா ?”

அவள் சிரித்துக் கொண்டே சரி என்றிருந்தால் , உலகிலேயே அழகான காஃபியைச் சுவைத்திருப்பேன். அவள் சிரிக்கவும் இல்லை , சம்மதம் சொல்லவும் இல்லை. அவளுக்கு அந்தப் பழக்கம் இல்லையாம். நிச்சயமாக இந்நேரம் மலை உச்சியிலிருந்து வேரோடு எல்லாக்  காப்பிச் செடிகளும் எகிறி குதித்து இறந்திருக்கும்.

“ஸோ ?” என்றேன்.

என்ன என்பது போல் பார்த்தாள். வேறென்ன சொல்லி, இன்னும் கொஞ்ச நேரம் இருக்க வைக்கலாம் என யோசித்தேன்.

“நாளைக்குப் பார்க்கலாம் .” என்னை நானே சபித்துக் கொண்டேன்.

சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

“இந்த ரெஸ்யூமே வேணாம்னு சொல்லிறவா .. ? ”

“அய்யயோ வேணாம் மல்லிகா , ரொம்ப வேல்யூவான  ரிசோர்ஸ் .. எடுக்கலைன்னா நமக்கு பெரிய நஷ்டம் .. ”

“நல்ல அகாடமிக் மார்க்ஸ்.. அண்ணா யுநிவர்சிட்டி … ட்ரைனிங்ல டாப்பர் வேற டா..”

“அதுல என்னங்க பிரச்சனையை உங்களுக்கு ?

“நீ தானப்பா சொன்ன டீம்ல ஏற்கனவே எட்டு பொண்ணுங்க இருக்காங்கன்னு .. பசங்க தான் நல்லா வேலை பாப்பாங்கன்னு”

“நல்லா பாத்தானுங்க .. கம்பெனி ஃபோனையே எடுத்து கேர்ள் பிரண்ட்ஸ் கூட கடலை தான் போடுவாங்க .. இதே பொண்ணுங்கன்னா ஒன்லி இன் கம்மிங் கால்ஸ் ..அதனால எப்படி பார்த்தாலும் நமக்கு லாபம் தான் ..”

 

“ஃப்ரெஷர் வேற டா ”

“அதனால என்ன .. எல்லாரும் ஒரு காலத்துல புதுசு தான .. பொண்ணு எல்லாத்துலயும் டாப்பர் .. ட்ரைனிங்கே தேவை இல்ல …”

“அப்போ உனக்கு பரவா இல்லையா ..? ”

“இவ்வளவு நேரம் என்ன சொல்லிட்டு இருக்கேன் .. ஒரு பொண்ணா இருந்துட்டு நீங்களே இப்படி பேசலாமா ..”

மல்லிகா அவரது கைக்குட்டையை எடுத்துக் கொடுத்தார்.

“அடுத்த ரெண்டு நாளும் …”

“இருங்க அதுக்கப்பறம் நான் சொல்லட்டா ?” ஹரிணி இடைமறித்தார். எல்லாருக்குமே காதல் கதைகளில் சுவாரசியம் இருக்கவே செய்கிறது. தலையசைத்தேன்.

“அடுத்த ரெண்டு நாளும் நீங்க வெண்ணிலா கூடவே இருந்தீங்க .. அவங்கள டிரைன் பண்ணீங்க .. அவங்க கூட க்ளோஸ் ஆனீங்க .. அவங்க இண்டர்வியூவும் கிளியர் பண்ணாங்க .. சரியா ? ”

நான் புன்னகைத்தேன்.

“நான் கூட அப்படித்தான் ஆசைப் பட்டேன் .. சொன்ன நம்பமாட்டீங்க அன்னைக்கு நைட் முழுக்க கண்ணாடி முன்னால நின்னு அவ கூட பேசறதுக்கு ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தேன் ..  ஆனா கொடுமையான விஷயம் என்னன்னா அடுத்த ரெண்டு நாளும் நான் அவளைப் பார்க்கவே இல்ல ..”

“என்னது ? பார்க்கவே இல்லையா ?! அப்போ இண்டர்வியூ என்ன ஆச்சு ?”

            தொடரும்

—————————————————————————————————————————