Tags

, , , ,

Dark art for our inner demons

அன்று மழை பெய்ததா

தெரியவில்லை

பெய்திருக்கத்தான் வேண்டும்

நினைவில் குளுமை

கண்களில் வெளிச்சக் கீற்று

உடலில் ஒட்டிக் கொள்ளும்

ஆடை

காற்றில் கரைகிறது 

எனது வெளி

ஒரு சுழலில் ஒரு நொடியில்

நிச்சயம் அங்கே தான்

இருக்கிறேன்

மனதில் முணுமுணுத்திருந்த

அதே பாடல் கூடக் கேட்கிறது

நகர்ந்தபடி இருக்கிறது

உள்ளே வரச்சொல்லிப் படபடக்கும்

கனவின் வாசல்

நீலச்சிறகு பட்சிகள் வல்லுகிர் பற்றிய

வருகைப் பதிவேட்டில்

கீழிருந்து மேலாய்

ஏழாவதாய்

உன் சாய்ந்த கையெழுத்து

சுழன்று ஏறும்

படிக்கட்டுகளை

விழுங்கிக் கொண்டிருக்கின்றன

வனயட்சியின் நாவுகள்

வானம் தேடி அலைந்தபடி

தொட்டிப்பூக்கள் வாசனை

இடதும் வலதுமாய்

திசைகாட்டிக் குதித்தோடும்

மஞ்சற் மாயப்பூனைகள்

எத்தனை பாதைகள்

எத்தனை திருப்பங்கள்

எத்தனை நிகழ்தகவுகள்

எத்தனை கதவுகள்

தவறான இடத்தில்

சரியான நேரத்தில்

ஒரு புதிர்விளையாட்டின்

வலைப்பின்னலில்

தொலைந்து போய்

வந்து நின்றது

இரண்டு வினாடிகளில்

நீ வெளிவரப்போகும்

கதவின் முன்னால்

கதவின் பின்

பூஜ்ஜியமும் ஒன்றும் பேசும்

ஓராயிரம் வெளிச்சப் பூச்சிகள்

அத்தனையும் தாண்டி

உன் ஒரு புன்னகை

அங்கே முடிகின்றது

இந்த நினைவுத் துண்டு

எவ்வளவு துளாவியும்

நினைவின் பெட்டகத்தில்

அதன் பின் கதைத்தொடர்ச்சி

காணக் கிடைக்கவில்லை

இப்படித்தான் நடந்ததா ?

இப்படியும்

நடந்திருக்கக் கூடும்

தெரியவில்லை

ஆனால் அன்று

நிச்சயம் மழை பெய்தது.

***