Tags

, ,

 

 

 

                   எனக்கும் தேரைகளுக்குமான உறவு இருபது வருடக் காலச்சக்கரத்தின் பற்களில் குருதி தோய்ந்த மசி எனப் படிந்திருக்கிறது . ஒரு நண்பனை வஞ்சிக்கையில்  ஏற்படுகின்ற சுகம் , எதிரி ஒருவனின் இறந்து போன உடலை ரத்தம் சிதறச் சிதற துண்டு துண்டாக வெட்டுகையில் ஏற்படும் உச்சம் ,நீண்ட நாள் கழித்து கணவனுடன் பார்க்கும் முன்னாள் காதலியின் தளர்ந்த உடல் பற்றிய பரிகாசம் எல்லாமும் சேர்ந்ததது .

 

இந்த புது வீடு வரும் வரை தேரை பற்றிய எண்ணங்களைக் கொஞ்ச நாட்களாகவே மறந்து விட்டிருந்தேன் . ஜூலியையும் கூட. ! ஜூலி ! என் அழகிய தேரைப் பெண்ணே

 

குளியலறையில் என் நிர்வாணம் பார்த்துக் கொண்டு அசையாமல் இருக்கும் இந்தத் தேரைக்கு எனக்குள் புதைந்து போயிருக்கும் கருப்புப் பக்கங்களை புரட்ட வைக்கத் தெரிந்திருக்கிறது .

 

தேரை மீதான என் ஆர்வம் அல்லது வெறி எப்பொழுதிருந்து என்று தெரியவில்லை . சிறுவயதில் எல்லாரும் பட்டாம்பூச்சி துரத்திக் கொண்டிருக்கையில் நான் மட்டும் மழையூறிப் போன குறும்பாறைகளைப் புரட்டிப் பொன்னிறத் தேரைகளைத் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன்.  ஓடில்லாத ஆமை போலக் குறுகிப் படுத்திருக்கும் தேரையின் பின்புறத்தைக் குச்சியால் தட்டித் தட்டி ஏதேனும் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை,  அடையச் செய்வதை ஒரு ரகசிய விளையாட்டாகவே வைத்திருந்திருக்கிறேன் .

 

என் உலகம்  ரகசியமானது . யாருக்கும் சொந்தமானது அல்ல. என்னைத் தவிர யாருக்கும் இடமில்லாதது . என் ஆழ்மனத்தின் அபத்தங்களும் அதைச் செயல்படுத்திப் பார்க்கும் இச்சைகளும் மட்டுமே நிரம்பியது.  எப்படியாயினும் எனக்கு சாதகமான விதிகள் கொண்ட விளையாட்டுகளைக் கொண்டது.

 

 

என் உலகிற்குள் நான் அனுமதித்த ஒரே ஒரு உயிரி ஜூலி தான்.  என் ரகசிய விளையாட்டின் துணை அவள் .

 

ஜூலியை யாருக்கும் பிடிக்காது . அவளது தோல் தேரையினுடையதைக் கடன் வாங்கி இருக்கும். ஒரு மாதிரி வறண்டு போன பளிங்காய் அவள் சட்டையில்லாத முதுகிருக்கும் . உனக்கெப்படித் தெரியும் என்று கேட்பவர்கள் மட்டும் கதையைத் தொடரவும். எனக்குத் தெரியும். அவள் தலைமுடிகளின் எண்ணிக்கை கூட என்னால் நிர்ணயிக்கப்பட்டது தான்.

 

அந்த இரட்டை குதிரை பின்னல்கள் கூட நான் சொன்னது போல ஆடுபவைகள். அவளது கண்களை உங்களுக்குப் பிடிக்காது. நிச்சயம் பிடிக்காது . வட்டச் சில்லுகள் கொண்ட  கண்ணாடிகளுக்குள்  அடைபட்டிருக்கும் அவள் கண்கள் காறிக் கொண்டே இருக்கும் .  கழுத்திலோ நெற்றியிலோ புறங்கைகளிலோ எனக்கு மட்டுமே காரணம் தெரிந்த காயங்கள் இருக்கும் .  பினோஃபார்மில் நடந்து வருகையில்  ஒரு பிராணி போலவே இருப்பாள். அந்தப் பிராணியை சரியாக இனம் கண்டு கொண்டவன் நான் மட்டுமே . இரு வார்த்தைகளில் சொல்வதானால் ஜூலி  என் அடிமை .

 

எனக்கும் அவளைப் பிடிக்காது. இருந்தும் என்னிடம் தோற்றுப் போகும் எல்லாவற்றிலும் எனக்குக் கொஞ்சம் பற்று உண்டு. ஆனால் துளியும் கருணை இருந்ததில்லை . 

 

உட்புறச் சுவற்றில் மஞ்சள் பூக்கள் பூத்திருந்த அந்த பாசிபடர்ந்த கிணறு  தான் என்றுமே எங்கள் விளையாட்டின்  இலக்கு . அந்த மஞ்சள் பூக்கள் எப்பொழுதுமே சவ ஊர்வலத்தில் மிதிபடும் பூக்களின் வாசத்தைப் பரப்புபவைகளாக இருந்தன. எங்கிருந்தோ  மழையில் அடித்து வரப் பட்டிருந்த ஆமை ஒன்று மட்டுமே எப்பொழுதாவது அங்கே எங்களைப் பார்த்திருக்க முடியும் . கிணற்றின் பின்புறத்தில் சிதிலமடைந்து போன தேவாலயம் ஒன்றும் , மீதி மூன்று  புறத்திலும்  அடர்ந்த கருவேலங்களும் இருக்கும் . யாரும் தவறி  உட்புகுந்து விடாமல் இருக்க முள்வேலி  போட்டிருந்தார்கள். விரும்பி நுழையும் எங்களைத் தடை செய்ய எதுவும் இல்லை. எங்களுக்கென்ற ஒரு ரகசிய வழி எப்பொழுதுமிருந்தது .

 

 முதலில் நான் …”

 

குச்சியை தேரையின் பின்புறத்திற்கு அருகில் தட்டினேன் .கொஞ்ச நேரம் அசையாதிருந்து விட்டு லேசாகத் தவ்வியது . ஜூலி  சிரித்தாள்.குச்சியால் அடித்தேன் . அதற்கும் சிரித்தாள் . நான் என்ன செய்தாலும் எதுவும் சொல்ல மாட்டாள்.

 

ம்ம் .. சிரித்தது போதும் இப்பொழுது நீ … “

 

ஜூலிக்குத் தேரையை விரட்டும் யுக்தி நன்கு தெரிந்திருந்தது .இரண்டே அடிகளில் அவளுடையது கிணற்றின் விளிம்புகளைத் தாண்டியிருந்தது .

 

தோற்றவர்களுடைய தேரையை இன்னொருவர் கொல்ல வேண்டும். தோற்பவர்களைப்  எனக்குப் பிடிப்பதில்லை .  என் ராஜ்யத்தில் தோற்பவர்களுக்கு உயிர்வாழ அனுமதி இல்லை . இதுவரை எந்தத் தேரையையும் நான் கொன்றதில்லை . ஜூலியைத்  தவிர . ஜூலியைக் கொன்றேன் என்றா சொன்னேன் !

 

 

என்னைக் கொல் .. நான் மறுபடியும் தோற்று விட்டேன் அருகிலிருந்த ஒரு சிறிய பாறையில் தலையைத் தொங்கப் போட்டு உட்கார்ந்தேன்.

 

இல்லை .. இல்லை .. ” வேகமாக ஓடிவந்து என் முன்னாள் மண்டியிட்டு அமர்ந்தாள். என் முகம் நிறுத்திப் பார்த்தாள். அவளின் பார்வை என்னைப் பரிகசிப்பதைப் போல் இருந்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை.

 

நாம் மறுபடியும் விளையாடுவோம் ..”

 

நான் வெறுப்பாகத் தலையசைத்தேன்.

 

பேசமாட்டாயா .?”

 

தோற்றவர்களுக்குப் பேச உரிமை இல்லை

 

கோபமா .. வேண்டுமானால் இந்தா ரத்தம் அருகிலிருந்த முள்ளில் கையைக் கிழித்து நீட்டினாள்.

 

அந்த சிவப்பு நிற திரவம் ஒரு வித போதையைத் தந்தது.  அந்த நாட்களிலெல்லாம் ,  அம்புலிமாவில் அரிதாக வந்து போகும் ஒரு ரத்தக்காட்டேரியாக , பௌர்ணமி இரவொன்றில் நான் மாறிவிடக் கூடும் என்று தீவிரமாக நம்பினேன். அந்த குறைந்த வெளிச்சத்தில் நிறைய மின்மினிகள் பறந்திருந்தன.

 

சரி .. மறுபடியும் விளையாடலாம் .. போய் தேரைகளைக் கொண்டு வா வேகமாகத் தலையாட்டிவிட்டு , கண்ணாடியைச் சரி செய்து கொண்டே ஓடினாள். என் கண்களில் ஒரு வித குரூரம் இருந்தது. எனக்கு அது பிடித்திருந்தது.

 

எல்லாக் கற்களையும் புரட்டிப் பார்த்தாள். கிணற்றை சுற்றி சுற்றி வந்தாள். பார்த்துக் கொண்டேயிருந்தேன்.மூச்சிரைக்க ஓடிவந்து என் முன்பு மறுபடியும்  மண்டியிட்டாள்.

 

தேரை எதுவும் கிடைக்கவில்லை மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.

 

எனக்கு ஒரு தேரை கிடைத்துவிட்டது என் புன்னகையை அவள் சரியாக மொழி பெயர்த்திருக்கவில்லை. அருகிலிருந்த மஞ்சனத்திக் குச்சியை ஒடித்தேன்.

 

திடும்’ என்ற சத்தத்துடன் வானில் ஒரு மின்னல் வெட்டியது . தேவாலயத்தின்  மணிக்கூண்டில் இருந்து சில இருள் பறவைகள் சலசலத்தபடி பறந்தது ஞாபகமிருக்கிறது.

 

 எங்கே தேரை ? ” என்றாள் .

 

இதோ   என்று அவளைக் காட்டினேன்.

 

ஓ அப்படியா … !  இவ்வளவு நாளாக எனக்குத் தெரியாமல் போய்விட்டதே நான் ஒரு தேரை என்று  

 

கைகளை மடிந்திருந்த கால்களுக்குள் விட்டு தேரையைப் போல மண்டியிட்டிருந்தாள். ” தேரைகள் ஆடைகள் அணிவதில்லை ” ..  சுளீர் என அடித்தேன்.

 

 வலிக்கிறது பிரபு ” . பாம்புச் சட்டை போன்ற அவள் தோலில் கீறல் விழுந்திருந்தது.

 

டிராகுலா பிரபு என்று சொல்   மீண்டும் அடித்தேன். கிணற்றை நோக்கித் தாவினாள்.

 

அடுத்த இரண்டு அடிகளில் கிணற்றின் விளிம்பில் இருந்தாள்.

 

போதுமா ? நீ ஜெயித்து விட்டாய் .. வா வீட்டுக்குப் போகலாம் .. ஆடைகளைக் கொடு  என்றாள்.

 

நான் சிரித்தேன். “இல்லை .. விளையாட்டு இன்னும் முடியவில்லை ..விதிமுறைகள் மாற்றப்பட்டுவிட்டன.   

 

இம்முறை என் புன்னகை புரிந்திருக்க வேண்டும் அவளுக்கு . டிராகுலா பிரபு டிராகுலா பிரபு என்று பிதற்றத் தொடங்கினாள். ஆடைகளை அவளை நோக்கி நீட்டிக் காட்டி விட்டு கிணற்றினுள் எறிந்தேன். அழத் துவங்கினாள் .

 

சரி சரி அழாதே ! எடுத்துத் தருகிறேன் என்றேன்.

 

 

 

கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தேன். தேவாலய உச்சியில் கைகளை நீட்டிக் கொண்டிருந்த தேவதை தண்ணீரில் நெளிந்து கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் கறை படிந்த நிலாவும் தெரிந்தது.  முழு நிலா. எனக்குப் பற்கள் நீள்வது போல் இருந்தன.

 

ஒரு பெரிய மேகமொன்று நிலாவைக் கடந்த பொழுதில் குச்சியை மீண்டுமொருமுறை உயர்த்தினேன்.

 

மழை பெய்யத் துவங்கியது. மின்மினிகளும் நட்சத்திரங்களும் சட்டென்று மறையத் துவங்கின. எனக்கு ஆடத் தோன்றியது. ஆடினேன். கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்தேன்.

 

எனக்கு நீச்சல் தெரியாது ..காப்பாற்று ” . தோற்றுப் போன அந்தத் தேரை தண்ணீருக்குள் இருந்து குரல் கொடுத்தது.

 

தோற்றுப் போனவைகளுக்கு வாழ உரிமை இல்லை பெரிய கல் ஒன்றைத் தலைக்கு மேல் தூக்கினேன். தேரையின் தலையைக் குறிவைத்து எறிந்தேன். ‘தொம்என்ற சப்தத்துடன் இடி விழுந்தது. மழை வலுக்கத் துவங்கியது.

 

இரவில் என் படுக்கை அறைக் கதவு தட்டப்பட்டது.  பாட்டியுடன் , ஜூலியின் அப்பாவும் அம்மாவும் நின்றிருந்தார்கள் .  கடைசியாக ஜூலியைப் பார்த்தது என்னுடன் தான் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவளை நான் பார்கவே இல்லை என்றதை அவர்கள் வெகுநேரம் நம்பவில்லை. அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டேன்.  வெகு நேரம் கதவு தட்டப் பட்டுக் கொண்டே இருந்தது. மெழுகுவர்த்தியைச் சுற்றி வரும் பூச்சிகளை திரியில் சிக்க வைத்து சட் சட்டென்ற சப்தம் கேட்டுக் கொண்டிருந்தேன். பூச்சிகள் தீர்ந்து போயிருந்த இரவில் உறங்கிப் போயிருந்தேன். அன்று இரவு முழுவதும் மழை பெய்து கொண்டேயிருந்தது .  இல்லாத வெளியொன்றிலிருந்து  என் கனவிற்குள் தேரைகள் உதிர்ந்து கொண்டே இருந்தன .

 

இரண்டு நாட்கள் கழித்து நீரில் ஊறிப் போயிருந்த ஜூலியின் உடல் கண்டுபிடிக்கப் பட்டது. என் மறைவிடம் அழிக்கப் பட்டது. கிணற்றை மூடினார்கள்.

 

 

ஜூலியின் இறுதிக் கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன் . ஜூலியின் உறவினர்கள் என்னைச் சபித்தார்கள் . ஏன் என எனக்குப் புரியவில்லை. ஃபாதர் என் தலையில் சிலுவைக் குறியிட்டு ஏதோ ஜபித்து சாத்தானே ஓடிவிடு என்றார். என் தலையில் மூன்று ஆறுகள் வரையப்பட்டிருக்கக்கூடும் என்று கிசுகிசுத்தார்கள். என் கவலையெல்லாம் இனி யாருடன் விளையாடப் போகிறேன் என்பதைப் பற்றியதாய் இருந்தது.  

 

ஜூலியைப் புதைக்கையில்  குழியில் யாருக்கும் தெரியாமல் தேரை ஒன்றைப் போட்டு வைத்தேன். இனி யாரும் பார்க்காத சமயத்தில் அதிலிருந்து தேரைகள் முளைக்கட்டும் என்று ஜபித்து விட்டு வீடு வந்தேன் .

 

எனது ஒரே தோழியை , ஒரே அடிமையை கிணற்றில் தள்ளி விட்டதற்கான எந்த விதமான பச்சாதாபமோ , குற்ற உணர்ச்சியோ எனக்கு ஏற்படவேயில்லை. நான் திடமானவன் என்று நம்பியிருந்தேன், தேரைகளால் என் படுக்கை அறை முழுவதும் நிறைந்து வழிவதாக கனவு வந்த அன்று இரவு வரை . வியர்த்து வழிந்து கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக நிலா வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. கிரணம் போல அதில் கொஞ்சம் நிழல் விழுந்தது. ஜூலி ஜன்னலுக்கு வெளியே நின்று கைகளை நீட்டி அழைத்துக் கொண்டிருந்தாள். திடுக்கிட்டு படுக்கையிலிருந்து விழுந்தேன். அவளைக் காணவில்லை. கனவின் நீட்சி என நினைத்துக் கொண்டேன்.

 

அதற்குப் பிறகு வந்த சில மழைநாட்களில் ஜூலி வரவேயில்லை . ஒருவேளை அவளது சவப் பெட்டியில் அமைதியாக விளையாடிக் கொண்டிருக்கக் கூடும் .

 

கொஞ்ச நாளைக்கு யாரும் என்னுடன் பேசவில்லை. பாட்டி மட்டும் என்னைக் கொலைகாரன் என்று திட்டிக் கொண்டே இருந்தாள்.  யாருக்கும் தெரியாத முறையில் பாட்டி இறந்து போன அடுத்த வாரத்தில் தான்  என்னைக் கூட்டிக் கொண்டு நகரத்திகு குடியேறினாள் அம்மா.  தேரைகள் இல்லாத நகரமது. அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் திருட்டுத் தனமாய் நுழையும் பூனைகள் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. நாட்கள் மட்டும் நகர்ந்து கொண்டே இருந்தன .

 

பின்னொரு நாளில் ,நான் உங்களைப் போலவே சாதாரணனாக மாறிப் போனேன். ஒழுங்காகப் படிப்பவனாக, அம்மா சொல் கேட்பவனாக, ஞாயிறுகளில் தேவாலயம் செல்பவனாக. கணிப்பொறி ஆள்பவனாக.

ஜூலி பற்றி மறந்து விட்டிருந்தேன். அவளுக்காக பாவமன்னிப்பு கூடக் கேட்டிருந்தேன். என் பாவங்கள் நிச்சயம் மன்னிக்கப் பட்டிருக்கும். நிச்சயமாகச் சொல்வேன் எனது ஒரே தோழியை , ஒரே அடிமையை கிணற்றில் தள்ளி விட்டதற்கான எந்த விதமான பச்சாதாபமோ , குற்ற உணர்ச்சியோ எனக்கு இன்னமும் ஏற்படவேயில்லை.

 

அதன் பிறகு நான் தேரைகளைப்  பார்க்கவேயில்லை சற்று முன்பு வரை .       

 

வாளியிலிருந்து தண்ணீரை எடுத்து தேரையின் மீது ஊற்றினேன். அது நகர்வதாகத் தெரியவில்லை. போ ! என்று விரட்டிய என் குரலுக்கு அடிபணியாத அதை எனக்குப் பிடிக்கவில்லை . எனக்குள் பழைய பிரபு லேசாக உறுமும் சப்தம் கேட்டது .

 

 

வெகு நாட்கள் கழித்து  மறுபடியும் அந்த விளையாட்டை விளையாடிப் பார்க்கத் தோன்றியது. துண்டை எடுத்துக் கட்டிக் கொண்டேன். அருகில் கிடைத்த குச்சியொன்றை எடுத்துத் தட்டினேன். குளியலறையை விட்டுத் தாவிக் குதித்தது. துரத்திக் கொண்டே ஓடினேன். கொல்லைப் புறக் கதவு வழியாக குதித்து ஓடியது. வாசலைத் தாண்டினேன்.

 

மாலையில் நிசி கலந்து கொண்டிருந்தது. மின்மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. அந்தத் தேரையைத் தவறவிட்டு விட்டேன். சுற்றிலும் தேடித் பார்த்தேன். “தேரை கிடைக்கவில்லை எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

 

எனக்குக் கிடைத்து விட்டதுஇருட்டிற்குள் இருந்து சிரிப்புச் சப்தம் கேட்டது. மூடப்பட்டுவிட்ட அந்த கிணற்று மஞ்சள் பூக்களின் சவ வாசம் சுற்றிலும் வீசியது .  சட்டென்று  வானில் மின்னல் ஒன்று  வெட்டியது . எட்டு வருடங்களுக்கு முன்னால் பார்த்த ஜூலி அதே பினோஃபார்மில் நின்று கொண்டிருந்தாள்.  ஒரு முறை திரும்பிய அவள் முதுகிலிருந்து, கீறிய கோட்டின் வழியே ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

 

ரத்தம் வேண்டுமா   என்றாள் . அவள் கண்ணாடியின் ஒரு பக்கம் உடைந்திருந்தது .

 

மறுத்துத் தலையசைத்தேன் .

 

இன்னும் என் விளையாட்டு மிச்சமிருக்கிறது .. இப்பொழுது விளையாடலாமா ??” சுளீரென முதுகில் அடித்தாள். கட்டியிருந்த துண்டு அவிழ்ந்து போனது.

 

எடுப்பதற்காகக் குனிந்தேன்

 

எடுக்க வேண்டாம் .. பரவாயில்லை .. தேரைகள் ஆடை அணிவதில்லை மறுபடியும் அடித்தாள். கால்களை மடித்து தேரை போல் தரையில் உட்கார்ந்தேன்.

 

 

 

 மழை பெய்யத் துவங்கியது.

 

அடுத்தடுத்த இரண்டு அடிகளில் கிணற்றின் விளிம்பில் இருந்தேன். உள்ளே கைகள் நீட்டிய தேவதையும் அதே நிலாவும் நனைந்துகொண்டிருந்தார்கள்.

 

 தோற்பதற்குத் தயாராக இருக்கிறாயா ? ” அவள் குரலில் பரிகாசமிருந்தது. மெல்ல அவளின் கோரைப் பற்கள் இரண்டும்  நீளத் துவங்கின.

 

 ம்ம் ” .. என்றேன் .

 

குச்சி காற்றில் உராயும் சப்தம் கேட்டது. எட்டு வருடங்களுக்கு முன் கிணற்றில் விழுந்த ஜூலியுடன் பாதியில் விட்டிருந்த விளையாட்டைத் தொடரக் கிணற்றில் குதித்தேன் .

 

 

*********